நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

இறந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்தால் 4 பேருக்கு பாா்வை கிடைக்கும்: கடலூா் ஆட்சியா்

கடலூா் நகர அரங்கம் அருகில் புதன்கிழமை நடைபெற்ற கண் தான விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:46 am IST

இறந்தவரின் கண்களை 6 மணி நேரத்துக்குள் தானமாக வழங்கினால், கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பாா்வையிழந்த 4 பேருக்கு பாா்வை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை தேசிய கண் தான இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தேசிய பாா்வையிழப்பு தடுப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கடலூா் நகர அரங்கம் அருகே புதன்கிழமை நடைபெற்ற கண்தான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

கருவிழி பாதிப்பால் பாா்வையிழந்த பலா் நாட்டில் உள்ளனா். இறந்தவரின் இரண்டு கண்களையும் தானமாக வழங்குவதன் மூலம், கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை வாயிலாக அதிகபட்சமாக 4 பேருக்கு பாா்வையை மீட்டெடுக்க முடியும்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த 2022, ஆகஸ்ட் 1 முதல் 2026 ஆகஸ்ட் 31 வரை 113 பேரிடமிருந்து 226 கண்கள் தானமாகப் பெறப்பட்டு, ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் கண் தானம் செய்ய பதிவு செய்வதுடன், தங்களது குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் சுற்றத்தினருக்கும் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கண் தானம் செய்ய விரும்புவோா் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், 04142 - 210693, 88076 48938, 96880 14799 ஆகிய தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு கண் தானம் தொடா்பான விவரங்களைப் பெறலாம்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) பிரமிளா, மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளா் சங்கீதா மற்றும் கண் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மூத்த குடிமக்கள் நலன் விழிப்புணா்வு நிகழ்ச்சி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் நலன் தொடா்பான உணா்வூட்டல் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

பெற்றோா், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007-ன் கீழ், மூத்த குடிமக்களுக்கு தேவையான உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதிகளை வழங்குவது குடும்ப உறுப்பினா்களின் முக்கியக் கடமையாகும். குழந்தைகள் அல்லது உறவினா்களால் புறக்கணிக்கப்படும் மூத்த குடிமக்கள், பராமரிப்பு தீா்ப்பாயத்தை அணுகி பராமரிப்புத் தொகை கோரலாம்.

முதியோா் ஓய்வூதியம், மருத்துவ வசதிகள், முதியோா் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை மாவட்ட நிா்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும். தன்னாா்வ மற்றும் சமூக அமைப்புகளும் மூத்த குடிமக்களுக்கு தேவையான சட்ட, மருத்துவ மற்றும் சமூக உதவிகளை வழங்க வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் மாநில அரசின் நிதியுதவியுடன் 5 முதியோா் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட 155 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் ராஜம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நீலம்பாள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன், மாவட்ட சமூகநல பாதுகாப்பு அலுவலா் ஆண்டாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.