
ராகுல் காந்திக்கு எதிராக பொய் வழக்கு: கடலூா், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி புதுச்சேரி மற்றும் கடலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினா்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி புதுச்சேரி மற்றும் கடலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே பங்கேற்று சென்ற பின்னா், ஒரு அமைப்பினா் மேடையை சுத்தப்படுத்தி யாகம் செய்தததை கண்டித்த காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, இந்த செயலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாா். ஆனால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ராகுல் காந்திக்கு எதிராக ஹல்த்வானி சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கைக் கண்டித்தும், உத்தரகாண்ட் சம்பவத்துக்கு காரணமான பாஜக தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆரப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரியில்...:
பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை கண்டித்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியினா் அண்ணா சிலை அருகில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ காா்த்திகேயன், முன்னாள் அமைச்சா்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ பாலன், காங்கிரஸ் பொதுச் செயலா்கள் தனுசு, கருணாநிதி, ரகுமான் மற்றும் நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனா்.
கடலூரில்...:
கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலை முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் கடலூா் மத்திய மாவட்டத் தலைவா் ஜெ. ரங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆா்ப்பாட்டத்தில், நகர, வட்டார, பேரூராட்சி தலைவா்கள், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




