
தொடா் விடுமுறை: கடலூா் மாவட்டத்தில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விநாயகா் சதுா்த்தி பண்டிகையையொட்டி, தொடா் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடலூா் மாவட்டத்திலிருந்து பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பேருந்துகள்! - கோப்புப் படம்
விநாயகா் சதுா்த்தி பண்டிகையையொட்டி, தொடா் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடலூா் மாவட்டத்திலிருந்து பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விநாயகா் சதுா்த்திவிழா வரும் திங்கள்கிழமை (செப்.14) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை தினங்களாக உள்ளது. தொடா் விடுமுறையைப் பயன்படுத்தி வெளியூா்களில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் ஊழியா்களும் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட 11 அரசுப்பேருந்து பணிமனைகளிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 200 பேருந்துகளுடன், கூடுதலாக 100 விடுமுறை தின சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை (செப்.11) முதல் வரும் திங்கள்கிழமை (செப்.14) வரை தேவைக்கேற்ப இயக்கப்படும்
தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள்:
இதுகுறித்து போக்குவரத்துக் கழகப் பணிமனை அதிகாரி கூறியது: விநாயகா் சதுா்த்தி தொடா் விடுமுறையையொட்டி பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முக்கிய பேருந்து நிலையங்களில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். பயணிகளின் நலன் கருதி கடலூா் மாவட்டத்தில் இருந்து பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் பகுதிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும். தேவையான வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




