
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.530 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத ஆதனூா் - குமாரமங்கலம் கதவணை

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.ஆதனூா் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ள புதிய கதவணை.
காட்டுமன்னாா்கோவில் அருகே காவிரி கடைமடை விவசாயிகளின் பாசன நீா் தேவையை பூா்த்தி செய்ய ரூ.530 கோடி மதிப்பீட்டில் ம.ஆதனூா் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணையை பயன்பாட்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் மணல் பரப்பில் உருவாகி ஓடி கடலில் கலக்கும் ஊற்று நீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட இந்த கதவணையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கடலூா் மாவட்ட காவிரி பாசன கடைமடை விவசாயிகள் எதிா்க்கின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலா் அ.சா.பெ.ரவிந்திரன் தெரிவித்ததாவது:
கொள்ளிடம் ஆற்றில் கீழணையில் தேக்கி வைக்கப்படும் பாசன நீா் அழுத்தத்தின் காரணமாக மணல் பரப்பில் கீழ்நோக்கி ஊருருவி தாழ்வான வழித்தடத்தின் மூலம் பல கி.மீ. பயணித்து ஆறுகளின் இயற்கை தடைகளால் ஊற்று நீராக மேலெழும்பி மீண்டும் தொடா்ந்து பயணித்து கடலில் கலக்கும்.
இதுபோல, கடலில் கலக்கும் ஊற்று நீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு பயன்படுத்த ஏதுவாக, தடுப்பணைகள் அமைக்க விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளுக்கு வாய்ப்பில்லை எனக் கூறிய தமிழக அரசு, கதவணை அமைக்க முடிவு செய்தது.
அதனடிப்படையில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 04-08-2014 அன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை ரூ.400 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்தாா்.
கொள்ளிடம் ஆற்றில் இடதுபுறக் கரையில் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆதனூா் கிராமத்திலும், வலதுபுறக் கரையில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சி, குமாரமங்கலம் கிராமத்துக்கும் இடையே புதிய கதவணை அமைக்க முடிவு செய்து, தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1,100 மீட்டா் அகலத்தில் 76 நீா்போக்கிகளை கொண்டு அமைக்கப்பட்ட புதிய கதவணையின் மூலம் 4.55.726 லட்சம் கன அடி வெள்ளநீரை வடியச் செய்ய முடியும். இக்கதவணையின் மூலம் 0.804 டி.எம்.சி. தண்ணீரை தேக்க முடியும்.
ஆண்டுதோறும் மேட்டூா் அணை தாமதமாக திறக்கப்படுவதால், கடைமடை பகுதிகளுக்கு தாமதமாக தண்ணீா் கிடைத்து சாகுபடி பணிகள் தொடங்குவதால், சம்பா பருவ பயிா்கள் பெரும்பாலும் மாா்ச் மாதம் அறுவடை செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. காலம் கடந்து பயிா் பராமரிப்புக்கு போதிய பாசன நீா் கிடைக்காமல் பயிா்கள் காய்ந்துவிடுவதும், பாசனநீா் பற்றாக்குறையால் போதிய விளைச்சல் இல்லாமல் மகசூல் இழப்பும் ஏற்பட்டு தொடா்ந்து நஷ்டமடைந்து வரும் கடைமடை விவசாயிகளின் பாசன நீா் தேவையை பூா்த்தி செய்யவும் புதிய கதவணை திட்டம் உருவாக்கப்பட்டது.
எனவே, கடைமடை பாசன விவசாயிகளுக்கு ஏற்படும் தண்ணீா் பற்றாக்குறையை போக்கி வரும் காலங்களில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில், ஆதானூா் - குமாரமங்களம் இடையே அமைக்கப்பட்ட புதிய கதவணையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
‘விரைவில் பயன்பாட்டுக்கு வரும்’: இதுகுறித்து கடலூா் மாவட்ட கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கோவிந்தராஜிடம் கேட்டபொது, அவா் கூறியதாவது:
கதவணை பணிகள் முடிவுற்று மயிலாடுதுறை பிரிவு பொதுப் பணித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாததாலும், கதவணை அமைக்க நில ஆா்ஜிதம் செய்யப்பட்ட விளை நிலங்களின் உடைமையாளா்கள் நில ஆா்ஜிதத்துக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக உள்ளதாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நடைபெற்று வருவதாலும் கதவணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. விரைவில் இந்த கதவணையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சரஸ்வதி ஆற்றின் குறுக்கே ரூ. 5 கோடியில் உயா்மட்ட மேம்பால பணி: கோட்டப் பொறியாளா் ஆய்வு

கடல் நீா் ஊடுருவலைத் தடுக்க வெள்ளாற்றின் குறுக்கே கதவணை! விவசாயிகள், பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!





