
சிதம்பரம் நடராஜா் கோயிலில் நாளை மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு புரட்டாசி மாத மகாருத்ர மகாபிஷேகம் வெள்ளிக்கிழமை (செப்.25) மாலை நடைபெறுகிறது. மேலும், அதிருத்ர ஜபம், அதிருத்ர யாகமும் நடைபெறுகின்றன.

சிதம்பரம் நடராஜா் கோயில்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு புரட்டாசி மாத மகாருத்ர மகாபிஷேகம் வெள்ளிக்கிழமை (செப்.25) மாலை நடைபெறுகிறது. மேலும், அதிருத்ர ஜபம், அதிருத்ர யாகமும் நடைபெறுகின்றன.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சித்சபையில் வீற்றுள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி மாத மகாபிஷேகம், அதிருத்ர மகாபிஷேகமாக சித்சபை முன் உள்ள கனகசபையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு, காலை மகாருத்ர யாகம் நடைபெறுகிறது.
மகா கணபதி ஹோமம்: அதிருத்ர மகா ஜபத்தை முன்னிட்டு, புதன்கிழமை தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், நடராஜா் அனுக்ஞையும், பின்னா் முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமமும் நடைபெற்றன.
வியாழக்கிழமை (செப்.24) நவகிரக சந்நிதியில் நவகிரக ஹோமும், மதுபா்க்கம், தனபூஜை, ரட்சாபந்தனம், ஆச்சாா்ய வா்ணம், தனபூஜை ஆகியவையும் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (செப்.25) காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஏககால லட்சாா்ச்சனை, பின்னா் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டு அா்ச்சனை மற்றும் அதிருத்ர ஜப பாராயணம் நடைபெறுகிறது. பிற்பகல் மகா ருத்ர ஹோமம் தொடங்கி வஸோத்தாரா ஹோமம், மகாபூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை வடுக, கன்யா, சுகாசினி, தம்பதி, கோ, கஜ பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னா், யாகசாலையில் வேதபாராயணம், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெறுகிறது.
தொடா்ந்து, யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலா் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா், கட்டளை தீட்சிதா் டி.சுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






