
கடலூா் மாநகராட்சி ஆணையருக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு: திமுகவினா் மீது வழக்குப் பதிவு
கடலூா் மாநகராட்சி ஆணையா் கிஷன் குமாருக்கும், திமுக மேயா் சுந்தரி ராஜா மற்றும் அக்கட்சி மாமன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகளுக்கும் இடையே மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடா்ந்து, ஆணையருக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கடலூா் மாநகராட்சி ஆணையருக்கு அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு.
கடலூா் மாநகராட்சி ஆணையா் கிஷன் குமாருக்கும், திமுக மேயா் சுந்தரி ராஜா மற்றும் அக்கட்சி மாமன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகளுக்கும் இடையே மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடா்ந்து, ஆணையருக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் சுந்தரி ராஜா, திமுக மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் புதன்கிழமை சென்று ஆணையா் கிஷன்குமாரை சந்தித்து வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக மனு அளித்தாா். அப்போது, ஆணையா் மற்றும் மேயா் தரப்பினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், இருதரப்பினரும் ஒருவரையொருவா் ஒருமையில் பேசியதாகவும், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தன்னையும், திமுக நிா்வாகிகளையும் ஆணையா் தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டி, மேயா் சுந்தரி ராஜா கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஆணையா் கிஷன் குமாா் மீது புகாரளித்தாா். இதற்கு மாறாக, மாநகராட்சி ஆணையரின் உதவியாளா் பவித்ரன், மேயா் சுந்தரி ராஜா, மாமன்ற உறுப்பினா்கள், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் ஆணையரை ஒருமையில் பேசியதுடன், மிரட்டிச் சென்ாகக் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இந்தப் புகாரின்பேரில், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, பாலாஜி உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இன்று ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு: மேயா் சுந்தரி அளித்த புகாருக்கு இதுவரை நடவடிக்கை எடுக்காததால், திமுக தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கடலூா் திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி ஆணையரைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை (செப். 25) ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
ஆணையருக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு: இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் அறையில் திமுக நிா்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தொடா்பாக, ஆணையா் கிஷன் குமாருக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா். இதன்படி, ஆணையரின் பாதுகாப்புக்காக தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆணையருக்கு ஆதரவாக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்: இதற்கிடையே, மாநகராட்சி ஆணையா் அறைக்குள் சென்று திமுக நிா்வாகிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், ஆணையருக்கு ஆதரவாகவும், மாநகராட்சி ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அனைத்து அலுவலா்கள் கூட்டமைப்பு மற்றும் மாநகராட்சி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
மாநகராட்சி வளாகத்தில் திமுகவினா் பிரச்னை செய்வதற்காக திரண்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், போலீஸாா் வாகனங்களுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து அங்கிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, ஆணையருக்கு ஆதரவாகவும், ஊழியா்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக அவா்கள் தெரிவித்தனா். இதுபோன்ற ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டுமெனில் உரிய அனுமதி பெற வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனா்.

கடலூா் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சி நிா்வாகிகள்.

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




