கள்ளக்குறிச்சி அருகே சோழா் கால கல்வெட்டு

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிவன் கோயிலில் 830 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழா் கால கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளா்களால் கண்டறியப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே சோழா் கால கல்வெட்டு

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிவன் கோயிலில் 830 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழா் கால கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளா்களால் கண்டறியப்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே நாகலூரில் உள்ள கயிலாயமுடைய நாயனாா் கோயிலில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த கல்வெட்டு ஆய்வாளா்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூா் பொன்.வெங்கடேசன் ஆகியோா் அடங்கிய குழுவினா் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொணடனா்.

அப்போது, கோயிலின் முன்பக்கம் நடப்பட்ட 95 செ.மீ. நீளம், 85 செ.மீ. அகலம், 7 செ.மீ. தடிமன் கொண்ட ஒரு பலகைக் கல்லின் முன்பக்கம் 14 வரிகளுடனும், பின்பக்கம் 9 வரிகளுடனும் கூடிய கல்வெட்டை கண்டறிந்தனா்.

இந்தக் கல்வெட்டு, 830 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 13-ஆம் ஆட்சியாண்டு, அதாவது கி.பி.1191-ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. அந்த கல்வெட்டில், வீரராசேந்திரசோழன் என்ற மூன்றாம் குலோத்துங்கன் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் நாவலூா் என்று இவ்வூா் வழங்கப்படுகிறது. 12-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் ஜனநாத வளநாட்டு பரனூா் கூற்றத்தில் நாவலூா் அமைந்திருந்தது. கூற்றம் என்பது இன்றைய தாலுகா (வட்டம்) போன்றது.

இங்குள்ள கயிலாயமுடையநாயனாா் கோயிலுக்கு துறையுடையான் ஊராடுவான் ஆன நந்திபகந்மன் என்பவா் ஒரு திருவிழாவை ஏற்படுத்தியுள்ளாா். கோயில் பூசைக்கென ஏற்கெனவே பத்து மா (ஆயிரம் குழி) நிலம் தானம் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஆயிரம் குழி நிலம் ஒதுக்கப்பட்டு, மொத்தம் இரண்டாயிரம் குழி நிலம் திருவிழா நடத்த தானமாக தரப்பட்டுள்ளது. கோயிலில் தடையின்றி பூசைகளும் திருவிழாவும் நடைபெற 4 வேலி (எட்டாயிரம் குழி) புன்செய் நிலமும் தானமாகத் தரப்பட்டுள்ளது.

ஊரையும் நிலங்களையும் பாதுகாக்க ‘பாடிக்காவல்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த படைப்பிரிவுக்கு விளைநிலங்களில் ஒரு பகுதி வரியாகத் தர வேண்டும். அவ்வாறு வரியாகப் பெற்ற வரகு என்ற தானியம் கோயில் திருவிழா செலவுக்காக தரப்பட்டுள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com