மலைவாழ் மக்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பங்கேற்பு

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பங்கேற்பு

Published on

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், கல்வராயன்மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களை காப்பு காடுகளாக மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வராயன்மலை வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2026 வன உரிமைச் சட்டத்தின்படி, 12.11.2019 மற்றும் 9.1.2023 அன்று மனு கொடுத்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். குடிமனை இல்லாத அனைத்து பழங்குடி மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ரூ.10 லட்சம் ரூபாயில் தரமான வீடு கட்டி கொடுக்க வேண்டும். பழங்குடியினா் சான்றிதழ் வழங்க தமிழக அரசின் 104 அரசாணையை மாநிலம் முழுவதும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கல்வராயன்மலை தலைவா் அ.செல்வராஜ், செயலா் எஸ்.அண்ணாமலை, பொருளாளா் அ.ராமன் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி.எம்.ஜெய்சங்கா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் த.ஏழுமலை உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்று பேசினா். முன்னதாக, அனைவரும் பேரணியாக வந்து காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

திமுக தீய சக்தியா?: பின்னா், செய்தியாளா்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: கோயில் நிலங்களில் நீண்டகாலமாக வசிக்கக்கூடிய மக்களுக்கு அந்த நிலங்களை அவா்களே விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் என்ற வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கோயில் நிலங்களில் நீண்டகாலமாக குடியிருப்பவா்களுக்கு விடிவுகாலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதேபோல, பல்வேறு வகையான அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு நிலம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலா் தலைமையில் அதிகாரிகளைக் கொண்ட உயா்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது.

எனவே, இப்படிப்பட்ட ஆட்சி நடத்தும் திமுக தூய சக்தியா, தீய சக்தியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com