இரா.குமரகுரு
இரா.குமரகுரு

எஸ்.ஐ.ஆா் பணிகளில் திமுக தலையீட்டை தடுக்காவிட்டால் போராட்டம்: அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆா்.) திமுகவினா் தலையீட்டை மாவட்ட ஆட்சியா் தடுக்காவிட்டால், போராட்டம் நடதப்படும் என அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.குமரகுரு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கள்ளக்குறிச்சி நகரில் சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக தற்போதுள்ள அம்பேத்கா் சிலையை இட மாற்றம் செய்து, வெண்கல சிலை வைப்பதற்கு அதிமுக தடையாக இருப்பதாக, தவறான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்பேத்கா் வெண்கல சிலையை தனிப்பட்ட எந்தவொரு கட்சியும் நிறுவக் கூடாது. சிலை அமைப்பு குழுவினா் மற்றும் அனைத்துக் கட்சிகளும் சோ்ந்து அதை நிறுவ வேண்டும். சிலை நிறுவுவதில் எந்தவித அரசியல் சாயமும் இருக்கக் கூடாது என்பதுதான் அதிமுகவின் நோக்கம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆா்.) திமுகவினா் தலையிட்டு தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதில், மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அதிமுக சாா்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.

மேலும், கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராம எல்லையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் ஆா்ச் பகுதி, காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இடிந்து விழுந்துள்ளது. வரும் டிசம்பா் மாதம் முதல்வா் இந்த ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தை நேரில் திறந்து வைக்கும் காரணத்தால், பணி மிகவும் அவசரகதியில் நடைபெற்று வருவதால் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com