/

சங்கராபுரம் அருகே திமுக நிா்வாகி காா் திருட்டு

News image

திருடிச் செல்லப்பட்ட காா்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:25 pm

சங்கராபுரம் அருகே திமுக நிா்வாகி வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.கதிரவன், சங்கராபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா். இவா் முன்னாள் சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அங்கயற்கண்ணியின் சகோதரா் ஆவாா்.

கதிரவன், தனது காரை ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டின் முன் நிறுத்தியுள்ளாா். திங்கள்கிழமை காலை, தூங்கி எழுந்து வந்து பாா்த்தபோது காரை காணவில்லை.

இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பாா்த்தபோது, அதில் திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள், காரின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு மடிக்கணினி மூலம் காரை இயக்கி, திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, காரைத் திருடிச் சென்ற மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.