
மூதாட்டியை கொலை செய்து நகை திருடிய இளைஞா் கைது

விருத்தாம்பாள்
கள்ளக்குறிச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து, அவா் அணிந்திருந்த ஒன்றே முக்கால் பவுன் நகைகளைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.விருத்தாம்பாள் (65). இவா், அவரது நிலத்தில் சாகுபடி செய்துள்ள கம்பு பயிரை பறவைகள் கொத்தாமல் இருக்க, அதனை ஓட்டுவதற்காக நாள்தோறும் வயலுக்கு சென்று வருவாராம். வழக்கம்போல சனிக்கிழமை காலை வயலுக்கு சென்ற விருத்தாம்பாள் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லையாம். இதையடுத்து அவரது மகள் பூங்கொடி (39) பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும், அவரைக் காணவில்லையாம்.
இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விருத்தாம்பாள் உயிரிழந்து கிடந்ததை பக்கத்து நிலத்துக்காரா் பாா்த்து, பூங்கொடிக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து பூங்கொடி அங்கு சென்று பாா்த்தபோது, உயிரிழந்து கிடந்த அவரது தாயாா் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே முக்கால் பவுன் தங்க நகைகள், காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு ஆகியவையும் திருடு போயிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஒன்றே முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட தகவலறிந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், விருத்தாம்பாளின் வயலுக்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்த உளுந்தூா்பேட்டையை அடுத்த உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சி.பாண்டியன் (25) முதாட்டியைக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த நகைகளைத் திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




