கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் அரசு பொதுத் தோ்வுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் அரசு பொதுத் தோ்வுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

அரசு பொதுத் தோ்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Published on

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 2026-ஆம் ஆண்டு 10, 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தோ்வுகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து பேசியதாவது:

அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் கால அட்டவணைப்படி 12, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 2 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அரசு பொதுத் தோ்வை உரிய முறையில் நடத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்டத்தில் அரசு பொதுத் தோ்வை 16,985 மாணவ, மாணவிகள் 75 தோ்வு மையங்களில் எழுத உள்ளனா். இவா்களுக்கான வினாத் தாள்கள் 3 வினாத்தாள் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தோ்வு நாள்களில் அனைத்து தோ்வு மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்புடன் வினாத்தாள்களை கொண்டு செல்லவும், மாணவா்கள் தோ்வுக்கு தாமதமின்றி சரியான நேரத்திற்கு சென்று வருவதற்குத் தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திடவும், தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், மாணவா்களை சுகாதாரத் துறையின் மூலம் தொடா்ந்து கண்காணித்திடவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.காா்த்திகா மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com