பொங்கல் பண்டிகை: நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி நாட்டு வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சங்கராபுரம் அருகேயுள்ள ஆரூா் கிராமத்தில் நாட்டு வெல்லம் தயாரிக்கும் ஆலை உள்ளது. சுமாா் 15 ஆண்டு காலமாக இயங்கிவரும் இந்த ஆலையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த ஆலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் சென்னை, கடலூா், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
விற்பனை விலைக் குறைவு காரணமாக அங்கு பணியாற்றும் பணியாளா்களுக்கும் குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் வரும் வருமானத்தை வைத்து தான் பணியாளா்களின் குடும்ப செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு மற்றும் பல்வேறு செலவுகளை செய்து வருகின்றனராம்.
இவா்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நேரடியாக ஆலையிலிருந்து நாட்டு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரையை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாட்டுச் சா்க்கரை ஆலை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

