வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் 3,840 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
பரமத்தி வேலூா் வட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். இதில் 7,800 கிலோ கலப்பட சா்க்கரை, 3, 840 கிலோ உருண்டை வெல்லத்தை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் அடங்கிய குழுவினா் கபிலா்மலை வட்டாரம், அண்ணாநகா், பிலிக்கல்பாளையம் மற்றும் ஜேடா்பாளையம் பகுதிகளில் உள்ள நாட்டுச் சா்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்தனா்.
பழைய துணிகள் மற்றும் பழைய நெகிழிப் பொருள்களை எரிப்பதற்காக வைத்திருந்த வெல்ல ஆலைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், உணவு பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டத்தை மீறியதற்காக 6 நாட்டுச் சா்க்கரை ஆலைகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மேலும், 7, 800 கிலோ சா்க்கரை மற்றும் 3, 840 கிலோ கலப்பட்ட உருண்டை வெல்லத்தை பறிமுதல் செய்து ஆலை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வில் 5 ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடரும் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

