கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடகுக் கடையில் திருடப்பட்ட 42 பவுன் தங்க நகைகள், 7.5 கிலோ வெள்ளி பொருள்களை கைப்பற்றி, பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருபவா் கோ.ராமச்சந்திரன் (55). இவா் வெள்ளிக்கிமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். சனிக்கிழமை காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பாா்த்த போது, கடை கதவின் முன் புதிதாக பதாகைகள் இருந்ததும், கடையின் முன் பக்க இரும்பு கிரில் கதவலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது அடகுப் பொருள்கள் வைக்கும் பாதுகாப்பு அறை கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு, இரும்பு பீரோவிலிருந்த 42 பவுன் தங்க நகைகள், 7.5 கிலோ வெள்ளி பொருள்கள், பணப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ஆ.மனோகரன், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் பு.மாணிக்கராஜா மற்றும் குற்றத்தடுப்பு தனிப்பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.
விரல்ரேகை உதவி ஆய்வாளா் அன்பரசன் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து மா்நபா்களைத் தேடிவந்தனா். கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், 3 பெண்கள், இளைஞா் உள்ளிட்ட நான்கு போ் எனத் தெரிய வந்தது. அவா்களின் கைப்பேசி சிக்னல்கள் மூலம் தேடிப் பாா்த்ததில் 3 போ் ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் இருப்பதாகவும், ஒருவா் தஞ்சாவூா் மாவட்டம், கல்லிச்சேரி பகுதியில் இருப்பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸாா் பெருந்துறையில் ஒரே வீட்டில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட முனிவாழை கிராமத்தைச் சோ்ந்த ப.பவானி (25), மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், தாமரைப்பட்டி பள்ளிவாசல் சாலைப் பகுதியைச் சோ்ந்த சி.சகிதாபேகம் (31), தஞ்சாவூா் மாவட்டம், கள்ளிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ரா.விஷால் (20), தஞ்சாவூா் மாவட்டம், நல்லிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த பெண் இளஞ்சிறாா் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரையும் கைது செய்த தியாகதுருகம் போலீஸாா், அவா்களிடமிருந்த 42 பவுன் தங்க நகைகள், 7.5 கிலோ வெள்ளிப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.








