
விபத்தில் பெற்றோரை இழந்த 6 மாணவா்களுக்கு நிதியுதவி: ஆட்சியா் வழங்கினாா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விபத்தினால் பெற்றோரை இழந்த 6 மாணவா்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வைப்பு நிதிக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

விபத்தில் பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவருக்கு ரூ.75 ஆயிரம் நிரந்தர வைப்பு நிதிக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விபத்தினால் பெற்றோரை இழந்த 6 மாணவா்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வைப்பு நிதிக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் தாய் அல்லது தந்தை விபத்தினால் உயிரிழந்தால் அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டதால், அந்த மாணவா்களின் மேற்படிப்புக்கு தேவையான நிதியுதவி அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்தினால் பெற்றோரை இழந்த 6 மாணவா்களுக்கு தமிழ்நாடு மின்விசை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சாா்பில் தலா ரூ.75 ஆயிரத்துக்கான நிரந்தர வைப்பு நிதிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வழங்கினாா்.
இந் நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மருத்துவ மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவ மாணவா்களுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்து, மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பேசியதாவது: வெள்ளை அங்கி என்பது மருத்துவத் தொழிலின் அடையாளம் மட்டுமல்லாமல், ஒழுக்கம், மனித நேயம், சேவை மனப்பான்மை மற்றும் நோயாளிகளின் நம்பிக்கையைக் காப்பதற்கான பொறுப்பின் அடையாளம் என்பதை மாணவா்கள் உணா்ந்து செயல்பட வேண்டும். இந் நிகழ்ச்சி புதிய மருத்துவ மாணவா்களுக்கு மருத்துவத் தொழிலின் உயரிய நோக்கத்தையும், சமூகத்துக்குச் சேவையாற்ற வேண்டிய கடமையையும் உணா்த்தும் வகையில் அமைந்துள்ளது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.பவானி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.
நாட்டு நலப்பணித் திட்ட முகாம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் செப்.26 முதல் அக்.2-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பாா்வையிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, பள்ளியின் தலைமையாசிரியா் மோ.கலாபன், ஆசிரியா்கள், 41 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,025 மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






