மீண்டும் அரசியல் கட்சி தொடங்குகிறார் புதுவை கண்ணன்

புதுச்சேரியில் மீண்டும் அரசியல் கட்சியை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும்,  முன்னாள் எம்பியுமான கண்ணன் தொடங்க உள்ளார். 
Updated on
1 min read

புதுச்சேரியில் மீண்டும் அரசியல் கட்சியை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும்,  முன்னாள் எம்பியுமான கண்ணன் தொடங்க உள்ளார். 
புதுவை அரசியலில் முக்கியத் தலைவர்களில் கண்ணனும் ஒருவர்.  இவர் காங்கிரஸில் தனது அரசியலை தொடங்கினார்.  கடந்த 1985-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சுகாதார மற்றும் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 
அதையடுத்து 1991-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற அவர் நடத்திய பாத யாத்திரையும் முக்கியமானதாக அமைந்தது.  அதன் பின்பு 1996-ஆம் ஆண்டில்  தமாகாவில் புதுவை மாநிலத் தலைவரானார்.  அத்தேர்தலில் தமாகா 6 தொகுதிகளில் வென்றதால் உள்துறை அமைச்சரானார். தொடர்ந்து அமைச்சர் பதவி உள்பட முக்கிய பதவிகளை வகித்தார். 
 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது மீண்டும் புதுவை முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸ் கட்சி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியது.  மாநிலங்களவை எம்பியான கண்ணன் செயல்பட்ட நிலையில் கட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டு கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். மக்களவை எம்பி தேர்தலில் அவர் பிரசாரமும் செய்யவில்லை.  அதைத்தொடர்ந்து கடந்த 14.2.21016-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக தேர்தல் பிரிவு செயலராக இருந்தார். 
 அதிமுக சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.  இந்த நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து விலகினார்.  அதையடுத்து அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார்.  மீண்டும் காங்கிரஸில் அவர் இணைவார் என்று பேச்சு எழுந்தது.  இந்த நிலையில், கண்ணனின் தீவிர ஆதரவாளர்கள் அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். 
புதுச்சேரியில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாகவும், மக்கள் பாதிப்பு தொடர்பாகவும் மக்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர்.  இதையடுத்து மீண்டும் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் இறங்க அவரிடம் வலியுறுத்தினர்.அதற்கு கண்ணனும் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே வெளியிடுவார் என்றும் உறுதி செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com