புதுவை சட்டப்பேரவைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நிதி ஒதுக்கீட்டு மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
நிதி மசோதா நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் திருக்குறளை வாசித்து பேரவை நடவடிக்கைகளை தொடங்கினார்.
அப்போது, அ.தி.மு.க. குழுத் தலைவர் ஆ.அன்பழகன் குறுக்கிட்டுப் பேசியதாவது:
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் கடந்த ஜூலை 18-ஆம் தேதி நிதி ஒதுக்கீட்டு மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா காலத்தோடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? அதற்கு அவரும் அனுமதி கொடுத்தாரா? இல்லையா? எப்போது நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து பேரவைக்கு திரும்ப அனுப்பினார். அதில்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாரா? அதை ஏற்றுத்தான் பேரவை கூடுகிறதா? அதை தெளிவுபடுத்த வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களின் உரிமை பாதிக்கும் வகையில் ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் சட்டப்பேரவைக்கு வெளியே கருத்து தெரிவித்துள்ளார்.
அதை இங்கே கூற வேண்டும். சட்டப்பேரவையின் அன்றாட நிகழ்வுகள் முடக்கப்பட்டதற்கான காரணம் என்ன? ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் செயல் குறித்து மத்திய உள்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத சூழல் தற்போது இங்கு நிலவுகிறது.
இதற்கு முதல்வர் விளக்கம் தர வேண்டும். அதை தெரியப்படுத்திவிட்டு பேரவையை நடத்த வேண்டும்.
என்.எஸ்.ஜெ.ஜெயபால் (என்.ஆர்.காங்கிரஸ்):
உச்ச நீதிமன்ற ஆணைப்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க ஆளுநர் பரிந்துரை செய்தார்.
அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்): உச்ச நீதிமன்றம் மற்றும் ஆளுநர் குறித்து பேரவையில் பேசுவது தவறு. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனந்தராமன், லட்சுமிநாராயணன், எம்.என்.ஆர். பாலன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வையாபுரி மணிகண்டன் : சட்டப்பேரவை தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கம் அளிக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: அனைவரும் உட்காருங்கள். முதல்வர் பதில் அளிப்பார்.
இதையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.
நியமன எம்.எல்.ஏ வி.சாமிநாதன் (பாஜக): எங்களிடம் பேரவையில் கையெழுத்து வாங்கவில்லை. வருகைப் பதிவேட்டில் பெயரில்லை.
பேரவைத் தலைவர்: கையெழுத்து வாங்குவார்கள்.
அன்பழகன்: சட்டப்பேரவையில் முன்னோர்கள் கொண்டு வந்த பேரவை நடத்தை விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
வைத்திலிங்கம்: முதலில் நிதி ஒதுக்க மசோதாவை நிறைவேற்றுவோம். பின்னர் இது தொடர்பாக பேசுவோம்.
அன்பழகன்: இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேரவை நடக்கவில்லை. நிதி மசோதா ஒப்புதலுக்கு அனுப்பியும் ஏன் ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த அரசு பலவீன அரசாக உள்ளது.
முதல்வர்: ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதுடன் உள்துறைக்கு நகல் அனுப்பியுள்ளேன். அத்துடன் அதிகாரம் மீறுவதாகவும் தெரிவித்துள்ளேன்.
அன்பழகன்: அதிகாரத்தை சுய விருப்பு, வெறுப்புக்காக பயன்படுத்தக்கூடாது.
இதையடுத்து வாக்குவாதத்துக்கு இடையே பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் 2018-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான சட்ட முன்வரைவை தாக்கல் செய்ய முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். முதல்வரும் அச்சட்ட முன்வரைவை முன்மொழிந்தார்.
இதையடுத்து, நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையா? ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்போது கவனம்!
தெய்வ தரிசனம்... முன்னோர் ஆன்மா சாந்தியடைய திருக்குடவாயில் கோனேசுவரர்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


