
முதல்வர் நாராயணசாமி தலைமையில் கருணாநிதிக்கு அஞ்சலி
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு, முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள்ஆ. நமச்சிவாயம், ஷாஜகான், இரா. கமலக்கண்ணன், முதல்வவரின் நாடாளுமன்ற செயலர் க.லட்சுமிநாராயணன், அரசுக் கொறடா ஆர்.அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுபோல, பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அமைச்சரவையில் புகழாரம்
புதுவை அமைச்சரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி, புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் உள்பட அரசுத் துறைச் செயலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மறைந்த கருணாநிதிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் விவரம்:
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழக முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த வரும், திராவிட இயக்க முன்னோடியும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி காலமானார் என்ற செய்தி கேட்டு அமைச்சரவை மிகுந்த துயருகிறது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், கல்லக்குடி பெயர் மாற்றப் போராட்டம் என பல போராட்டங்களைத் தலைமை வகித்து இளம் வயதிலேயே வெற்றிகரமாக நடத்தியவர் கருணாநிதி.
போட்டியிட்ட 13 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றியவர்.
சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் அத்தனையும் ஆக்கப் பூர்வமானவை.
ஜனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட மக்கள் தலைவர். கலை, இலக்கியம், கவிதை, பத்திரிகை துறை, திரைப்படத்துறை, சமூக நீதி, பொதுவுடமை போன்றவற்றிலும் சிறந்து விளங்கியவர்.
பன்முகத்தன்மை கொண்டவர். தமிழுக்கு அளப்பறிய தொண்டாற்றி, முத்தமிழ் அறிஞர் என்று புகழப்பட்டவர்.
தாலிக்குத் தங்கம், சமத்துவபுரம், பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு, காவல்துறை சீர்திருத்தம், உழவர் சந்தை போன்ற பல்வேறு தரப்பினருக்கான நலத் திட்டங்களை உருவாக்கி, கிராம, நகரப் பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியவர்.
அகில இந்திய அரசியலிலும் ஈடுபட்டு, பல பிரதமர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அதன் மூலம் இந்தியாவே உற்று நோக்கிய அரசியல்வாதியாக திகழ்ந்தவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்தபோது, அதன் வழிகாட்டியாக விளங்கி, இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலியவர். அவருடைய இழப்பு தமிழகத்துக்கு மட்டுமன்றி புதுவை உள்ளிட்ட அகில இந்தியாவுக்கும், உலகத் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





