மத்திய அரசின் வாழ்நிலை மதிப்பீடு ஆய்வறிக்கையில் தேசிய அளவில் புதுச்சேரி 60-ஆவது இடத்தைப் பிடித்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக முன்னாள் எம்.பி.யும், புதுவை மாநில அதிமுக இணைச் செயலருமான மு.ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுவை பிரதேசம் வெகு வேகமாக நகரமயமாகி வருகிறது. பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர். நகரமயமாவதில் நாட்டில் புதுவை ஐந்தாம் இடத்திலும், தென் மாநிலங்களில் முதலிடத்திலும் உள்ளது.
மத்திய வீட்டு வசதி - நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மக்களின் அடிப்படை வசதிகளின் எண்ணிக்கை, அளவைப் பொறுத்து புதுச்சேரி நகரம் உள்பட 111 நகரங்களின் வாழ்நிலையை மதிப்பிட்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தர வரிசைப் பட்டியலில் புதுச்சேரி 60-ஆவது இடத்தில் உள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் மகாராஷ்டிராவின் புனே நகரம் 58.11 மதிப்பெண் பெற்று முதலிடத்திலும், 34.23 மதிப்பெண் பெற்று புதுச்சேரி 60-ஆவது இடத்திலும் உள்ளன. நகரத்தின் ஆளுமைத் தன்மையில் புதுச்சேரி 86-ஆவது இடத்திலும், இயற்கைப் பொருள் சார்ந்த நிலையில் 61-ஆவது இடத்திலும், பொருளாதார நிலையில் 55-ஆவது இடத்திலும், சமூக நிலையில் 28-ஆவது இடத்திலும் உள்ளது. இதன்படி, புதுச்சேரி நகரம் வாழ்வதற்கு மிக வசதியான நகரம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த நிலை எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து புதுச்சேரியின் முதல்வரும், துணை நிலை ஆளுநரும், அதிகாரிகளும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நகர ஆளுமையில் புதுச்சேரி 86-ஆவது இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் புதுச்சேரியை ஆள்வதற்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நகராட்சி இல்லாததுதான்.
1968-இல் இருந்து 2018 வரையான காலகட்டத்தில் புதுச்சேரி நகராட்சி முடக்கப்பட்டு மக்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லை. நகராட்சிக்குத் தேர்தல் நடத்தி நகர நிர்வாகத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். புதுச்சேரி நகரத்துக்கென்று பிரத்யேக திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். பொலிவுறு நகரம் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









