புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாயப் பதவி வகிப்பது தவறல்ல
புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாயப் பதவி வகிப்பது சட்டப்படி தவறல்ல என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.


புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாயப் பதவி வகிப்பது சட்டப்படி தவறல்ல என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், திமுக
எம்.எல்.ஏ.க்கள் இருவர் என 7 பேர் வாரியத் தலைவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
எம்எல்ஏ, வாரியத் தலைவர் என இரட்டை ஆதாயம் தரக்கூடிய பதவியை இவர்கள் வகிப்பதால், புதுதில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது போல, இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, அதிமுக வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் புதுவை அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, புதுவையில் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகிக்கும் வாரியத் தலைவர்கள் லட்சக்கணக்கில் அரசுப் பணத்தை செலவிட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதனால், இரட்டைப் பதவி குறித்த சர்ச்சை புதுவையில் மீண்டும் எழுந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின்படி, புதுவை எம்.எல்.ஏ.க்கள் பாலன் பிடிடிசி-க்கும், சிவா பிப்டிக் அமைப்புக்கும், ஜெயமூர்த்தி பி.பி.ஏ.-வுக்கும், விஜயவேணி சாராய ஆலைக்கும், தீப்பாய்ந்தான் குடிசை மாற்று வாரியத்துக்கும், கீதா ஆனந்தன் பவர் கார்ப்பரேஷனுக்கும், தனவேலு பாப்ஸ்கோவுக்கும் கடந்த 14.7.2016 முதல் 13.7.2017 வரை தலைவர்களாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.
இவர்களே மீண்டும் கடந்த 17.12.2017 முதல் அந்தந்த நிறுவனங்களின் வாரியத் தலைவர்களாகவும் தொடர்கின்றனர்.
இவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வகித்து வரும் பதவிக்கு ஊதியம் உள்பட பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், வாரியத் தலைவர்களாக இவர்கள் பொறுப்பு வகித்து வரும் அந்தந்த அரசு நிறுவனங்களில் வாகனம், தொலைபேசி, செல்லிடப்பேசி கட்டணம், வாகன எரிபொருளுக்கான தொகை, அலுவலக வாடகை, அலுவலகத்தை சீரமைத்தது, பரிசுப் பொருள்கள் மற்றும் பட்டாசுகள், அவர்கள் நியமித்துக்கொண்ட ஊழியர்களுக்கு ஊதியம் என பதவியேற்ற கடந்த ஓராண்டு காலத்தில் செலவிட்டுள்ளனர்.
எம்.என்.ஆர்.பாலன் ரூ.11லட்சத்து 82 ஆயிரத்து 438, சிவா ரூ.88 ஆயிரத்து 910, ஜெயமூர்த்தி ரூ.9 லட்சத்து 48 ஆயிரத்து 627, விஜயவேணி ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்து 512, தீப்பாய்ந்தான் ரூ.9 லட்சத்து 98 ஆயிரத்து 818, கீதா ஆனந்தன் ரூ.8 லட்சத்து 6 ஆயிரத்து 73, தனவேலு ரூ.12 லட்சத்து 64 ஆயிரத்து 694 என நிதி பெற்று செலவு செய்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதுபோல, இரட்டைப் பதவி மூலம் ஆதாயம் பெற்று வருவதால், இவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் பி.ரகுபதி, ஆளுநர் கிரண் பேடிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதேபோல, சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன், இரட்டை ஆதாயப் பதவி வகிக்கும் எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் ஒரு வாரத்துக்குள் ராஜிநாமா செய்யாவிடில், குடியரசுத் தலைவருக்கு புகார் மனு அனுப்புவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வே.நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டபோது அவர் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டைப் பதவி வகிப்பது சட்டப்படி தவறில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்ட சட்டம் ஏற்கெனவே மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் இரட்டைப் பதவி வகிப்பதில் தவறில்லை.
வாரியத் தலைவர்கள் விதிகளுக்கு உள்பட்டுத்தான் செலவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் இரட்டைப் பதவி வகிப்பது தொடர்பாக தேவையற்ற சர்ச்சையை சிலர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...