செருப்பில் மறைத்து சிறைக்குள் செல்லிடப்பேசி யாருக்காக கடத்தப்பட இருந்தது என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடந்த 5 -ஆம் தேதி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூசைராஜ் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு செல்லிடப்பேசி கொடுக்க மர்ம நபர்கள் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கைதிக்கு செல்லிடப்பேசி கொடுக்க முயன்ற ரெயின்போ நகரைச் சேர்ந்த சங்கர் (25), முத்தியால்பேட்டையைச் சேர்ந்த அப்பு (24), கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த அஜிஸ் (21), திருமால் (19), முகமது பரிது ( 20) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து செருப்பில் மறைத்து வைத்திருந்த செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களை சோதனை செய்தபோது 3 கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளையும் பறிமுதல் செய்தோம். சூசை ராஜ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சூசைராஜ் உள்ளிட்ட கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சிறையில் உள்ள பிரபல ரெüடி தாதா மணிகண்டனின் கூட்டாளிகள்.
கைப்பற்றப்பட்ட செல்லிடப்பேசி மணிகண்டனுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகிறோம்.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மிகப் பெரிய திருட்டுக் கும்பல் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். போலீஸாரின் தீவிர ரோந்துப் பணியின் காரணமாக, கடந்த மாதம் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளன என்றார் அபூர்வா குப்தா.