ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: கபில் சிபலுடன் புதுவை முதல்வர் ஆலோசனை

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மூத்த வழக்குரைஞர்களுமான கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோருடன்

Updated On :29 மார்ச் 2018, 3:56 am

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மூத்த வழக்குரைஞர்களுமான கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோருடன் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர்
 ஆ.நமச்சிவாயம் ஆகியோர் தில்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
 புதுவை அரசு பரிந்துரையின்றி மத்திய உள்துறையால் பாஜகவைச் சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டதை சட்டப் பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் ஏற்க மறுத்துவிட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என கடந்த 22-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
 இருப்பினும், தன்னிடம் விசாரிக்காமலும், பிரதிவாதியாகச் சேர்க்காமலும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் பேரவைத் தலைவர் ஏற்காமல், கடந்த 26-ஆம் தேதி பேரவைக்குள் வர நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுத்தார்.
 பேரவைக்குள் வரவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தனர்.
 அதேவேளையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், திமுக பிரமுகர் தனலட்சுமி ஆகியோர் மேல்முறையீட்டு மனு அளித்துள்ளனர். பேரவைத் தலைவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய பேரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
 நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், புதுவை அரசின் தில்லி பிரதிநிதி ஜான்குமார், க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தில்லியில் தற்போது முகாமிட்டுள்ளனர்.
 நியமன எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மூத்த வழக்குரைஞர்களான கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோருடன் தில்லியில் புதுவை முதல்வர், காங்கிரஸ் பிரமுகர்களும் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
 இந்த வழக்கில் லட்சுமிநாராயணன் சார்பாக கபில்சிபலும், தனலட்சுமி சார்பாக சல்மான்குர்ஷீத்தும் ஆஜராவார்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்களிடம் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் புதுவை காங்கிரஸ் பிரமுகர்கள் ஒப்படைத்தனர்.
 மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக் ஆகியோரை வியாழக்கிழமை சந்திக்க புதுவை முதல்வரும், மாநில காங்கிரஸ் பிரமுகர்களும் திட்டமிட்டுள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.