/

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி ஏஐடியுசியின் மக்கள் தலைவர் சுப்பையா சுமை தூக்குவோர் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:12 am

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி ஏஐடியுசியின் மக்கள் தலைவர் சுப்பையா சுமை தூக்குவோர் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
 இந்தச் சங்கத்தின் சார்பில் மாநில மாநாடு சிவாஜி சிலை அருகே உள்ள தனியார் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில ஏஐடியுசி செயல் தலைவர் நாரா.கலைநாதன் மாநாட்டு கொடியேற்றி வைத்தார். மாநிலத் தலைவர் வி.எஸ்.அபிஷேகம் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். பொதுச் செயலர் தினேஷ் பொன்னையா, செயலர் சேதுசெல்வம், துணைத் தலைவர் கலியபெருமாள், சுமை தூக்குவோர் சங்கத்தின் துணைச் செயலர் முருகன், துணைத் தலைவர் நளவேந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர். செயலர் தயாளன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் அபிஷேகம் கூறியதாவது:
 புதுவை அரசு சுமை ஏற்றும், இறக்கும் தொழிலை நசுக்கக் கூடிய வகையில் முதலாளிகளுக்கு ஆதரவாக புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் வந்த பிறகு பல இடங்களில் நடைமுறையில் இருந்த நியாயமான கூலியைக் குறைத்து விட்டனர். செய்த வேலைக்குக் கூலி கேட்டால் காவல் துறையில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டுகின்றனர்.
 காவல் துறை அச்சறுத்தலும் உள்ளது. எனவே, எதிர் வரும் காலங்களில் சுமை ஏற்றும், இறக்கும் தொழிலில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை தொழிலாளர் துறை தலையிட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 புதுவை அரசு கொண்டு வந்துள்ள சுமை ஏற்றும், இறக்கும் தொழிலாளர்கள் சம்மந்தமான சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சுமை ஏற்றும், இறக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.
 அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.