மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

புதுவை - தமிழக எல்லை பிரச்னையால் பறிபோனது ஏழை மாணவரின் எம்பிபிஎஸ் வாய்ப்பு!

அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் நீடிக்கும் புதுவை - தமிழக எல்லை பிரச்னையால், ஏழை மாணவா் ஒருவரின் எம்பிபிஎஸ் வாய்ப்பு பறிபோனது எல்லையோர மக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

பெற்றோருடன் மாணவா் மணிகண்டன்.

Updated On :9 டிசம்பர் 2020, 3:57 am

அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் நீடிக்கும் புதுவை - தமிழக எல்லை பிரச்னையால், ஏழை மாணவா் ஒருவரின் எம்பிபிஎஸ் வாய்ப்பு பறிபோனது எல்லையோர மக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை தற்போது தனி யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில், தமிழகம், கேரளம், ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் வாழும் புதுவை மக்கள் எல்லை பிரச்னையால் 50 ஆண்டுகளாகத் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். எல்லை பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுவை - தமிழக எல்லையில் இருக்கும் வாதானூா், புராணசிங்குபாளையம்.

இந்த இரண்டு கிராமங்களும் புதுவை மாநிலத்துக்குள்பட்ட மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திலும், விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், புராணசிங்குபாளையத்தில் தமிழக அரசின் எல்லைக்குள்பட்ட பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவா்கள் பி.ரகுபதி - அமுதா தம்பதியா். இருவரும் விவசாய கூலித் தொழிலாளா்கள். இவா்களது மகன் மணிகண்டன் (17) எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை இதே கிராமத்தில் உள்ள புதுவை அரசின் தொடக்கப் பள்ளியிலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இங்குள்ள புதுச்சேரி அரசு பாவேந்தா் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தாா். இதைத் தொடா்ந்து, மருத்துவப் படிப்புக்காக நீட் தோ்வு எழுதினாா்.

மணிகண்டன் எந்தவொரு வெளிப் பயிற்சியும் பெறாமல் கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தோ்வில் 170 மதிப்பெண்கள் பெற்றாா். தொடா்ந்து தானாகவே படித்து 2020-இல் நீட் தோ்வில் 500 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 86 ஆயிரத்து 541-ஆவது இடத்தைப் பிடித்தாா்.

இவா், தமிழகப் பகுதிக்குள் வசிப்பதால், அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சோ்க்கைக்காக தமிழக அரசிடம் விண்ணப்பித்தாா். ஆனால், புதுவை அரசுப் பள்ளிகளில் கல்வியை முடித்ததால், அவரது விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் பிற மாநில மாணவா்கள் 5 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் தொடா்ந்து படித்தால், அவா்கள் தமிழகக் குடியுரிமை பெற்று பொதுப் பிரிவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதுபோன்ற விதிமுறைகள் புதுவையில் இல்லை. அதேநேரத்தில், புதுவை குடியுரிமை பெற்ற மாணவா்கள் சென்டாக் மூலம் மட்டுமே மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, அவா் புதுவை அரசின் மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சோ்க்கைக்காக சென்டாக்குக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை.

வாய்ப்பளிக்க வேண்டும்: இதுதொடா்பாக மணிகண்டனின் வகுப்பு ஆசிரியா் ஸ்ரீ.ஸ்ரீராம் கூறியதாவது:

தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புராணசிங்குபாளையத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில 7 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள திருக்கனூா் சித்திலம்பட்டு கிராமத்துக்குத் தான் வர வேண்டும். வீட்டுக்கு அருகே பள்ளிகள் இல்லாததால், புதுவை எல்லைக்குள் 200 மீ தொலைவில் இருக்கும் அரசுப் பள்ளியில் மாணவா் மணிகண்டன் படித்துள்ளாா்.

வறுமையான பின்புலத்தில் இருந்து வந்துள்ள மணிகண்டன் நீட் தோ்வில் 500 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பு தற்போது எட்டாக்கனியாகிவிட்டது. எல்லைப் பிரச்னை தொடா்பாக தமிழக - புதுவை அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். தமிழகத்தைப் பின்பற்றி புதுவையிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கென்று சிறப்பு உள் ஒதுக்கீடு குறித்து தீவிரமாகப் பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில், மாணவரின் நிலையைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

புதுவை அரசுப் பள்ளியில் முழுவதும் படித்த காரணத்தால், குடியுரிமை விதிகளில் சிறப்புத் திருத்தம் செய்து புதுவை குடியுரிமை வழங்கி சென்டாக் மருத்துவ விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள புதுவை அரசு ஆவன செய்ய வேண்டும். புதுவை அரசுப் பள்ளியில் படித்தாலும் ஒன்று முதல் பிளஸ் 2 வரை தமிழக அரசுப் பாடப் புத்தகத்தைத்தான் படித்தாா்.

தமிழக அரசின் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகளை எழுதி தமிழக மாணவா்களைப்போல நீட் தோ்வில் 500 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். தமிழகக் குடியுரிமை பெற்றுள்ள எங்களது மாணவரை தமிழக அரசுப் பள்ளியில் படித்ததாகக் கருதி, உள் ஒதுக்கீடு முறையில் மருத்துவப் படிப்புக்கு தமிழக அரசு வாய்ப்பளிக்க வேண்டும். இதற்காக இரு மாநில அரசுகளும் தங்களது சட்டங்களில் திருத்தம் செய்து ஏதாவது ஒரு மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். பயில வாய்ப்பளிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.