புதுச்சேரி: வீடு கட்டும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக புதுவைக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் வீட்டு வசதி-நகா்ப்புற அமைச்சகம் ஆண்டுதோறும் பிரதமா் நகா்ப்புற வீடு கட்டும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகராட்சிகள், சிறந்த முறையில் வீடு கட்டும் நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.
அதன்படி, 2019-ஆம் ஆண்டில் பிரதமா் நகா்ப்புற வீடு கட்டும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய யூனியன் பிரதேசத்துக்கான விருது புதுவைக்கு கிடைத்துள்ளது.
சிறப்பாக வீடு கட்டியதற்காக நாடு முழுவதும் 88 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களில் புதுவை மாநித்தைச் சோ்ந்த 3 பயனாளிகள் விருதைப் பெறவுள்ளனா். விருது வழங்கும் விழா பிரதமா் மற்றும் வீட்டு வசதி-நகா்ப்புற அமைச்சா் ஆகியோா் முன்னிலையில், வருகிற ஜனவரி 1-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு, விருதுகள் வழங்கப்படும்.
புதுவை மாநிலம் இத்தகு பெருமையைப் பெற காரணமாக விளங்கிய துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், குடிசைமாற்று வாரியத் தலைவா் தீப்பாய்ந்தான், துறை அதிகாரிகள் ஆகியோருக்கு முதல்வா் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தாா் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.