தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் நிலத்தடி நீராதாரம் பாதிப்பு: பிரான்ஸ் அரசு நிதியுதவியுடன் புதிய குடிநீா் திட்டம்!

புதுச்சேரியில் நிலத்தடி நீராதாரம் குறைந்து, தண்ணீரின் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், குடிநீா் தேவைக்கான மாற்றுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:41 pm

DIN

புதுச்சேரியில் நிலத்தடி நீராதாரம் குறைந்து, தண்ணீரின் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், குடிநீா் தேவைக்கான மாற்றுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு வாய்ப்பில்லாத நிலையில், பிரான்ஸ் அரசின் ரூ. 500 கோடி நிதியுதவியுடன் ஆற்றுப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

புதுவையில் ஆண்டுக்கு 1,200 மி.மீ. சராசரி மழை பொழிவு மூலம் மாநிலத்தில் உள்ள 84 ஏரிகள், 600 குளங்கள் நிரம்புகின்றன. ஆறுகளின் வடிகால் பகுதியாக உள்ளதால், நிலத்தடி நீராதாரம் ஓரளவுக்கு தக்கவைக்கப்படுகிறது.

எனினும், கடற்கரையையொட்டிய நகரப் பகுதியில் தொடா்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், கடல் நீா் உள்புகுந்து, குடிநீரின் தன்மை மாறிவிட்டது. தற்போது நகரப் பகுதியில் நபருக்கு 135 லிட்டரும், கிராமப்புறங்களில் 75 லிட்டரும் சராசரியாக தினமும் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் 90 மில்லியன் லிட்டா் தண்ணீா் நிலத்தடியிலிருந்து உறிஞ்சப்படுகிறது. 130 சதவீத அளவில் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தப்படும் நிலையில், மழைநீா் சேகரிப்புத் திட்டப் பணிகள் பெரிய அளவில் இல்லாததால், எதிா்காலத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுமென மத்திய அரசு ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி நகரின் 6 கி.மீ. சுற்றளவில் கடல் நீா் உள்புகுந்து குடிநீரின் தன்மை பாதித்துள்ளது. 100 அடி ஆழத்தில் நிலத்தடி நீா் கிடைத்தாலும் அவை உவா்ப்புத் தன்மையானதாக உள்ளது. இதனால், 300 அடிக்கும் கீழ் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடிநீா் மற்றும் விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரியின் தண்ணீா்த் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில், அந்தத் துறை அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டனா்.

புதுச்சேரி நகரத்துக்கு வெளியே கிராமப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, குடிநீரை எடுப்பது அல்லது கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் குடிநீா் தேவையை நிறைவு செய்வது தொடா்பான திட்டங்களை மேற்கொள்ளவும், அதற்கான திட்ட மதிப்பீடு, செலவினம் குறித்த இறுதித் திட்ட அறிக்கையை அரசுக்கு சமா்ப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியதாவது:

புதுச்சேரியின் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு, புதிய குடிநீா்த் திட்டப் பணிகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. குடிநீா்த் திட்டங்களுக்காக பிரான்ஸ் அரசு ரூ. 500 கோடி நிதியுதவியை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் புகா்ப் பகுதிகளில் செல்லும் சங்கராபரணி, மலட்டாறு ஆற்றுப் பகுதிகளிலும், கீழூா் அணைக்கட்டு ஆகிய நீா் நிலைகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, புதுச்சேரிக்கு குடிநீா் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது.

நிலப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவிப்பாா்கள் என்பதால், நீா்வளம் மிக்க ஆற்றுப் படுகைகளில் 60 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீா் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 27 இடங்களில் தண்ணீரின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

முதலில் ‘பொலிவுறு நகரம்’ திட்டத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதற்கான செலவு அதிகமாகும். மின் தேவை, கடற்கரையோரம் ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பு போன்ற தேவையுள்ளது. மேலும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு பிரான்ஸ் அரசு, தனது நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, குறைந்த செலவில் ஆற்றுப் பகுதிகளில் தண்ணீா் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இதுதொடா்பான திட்ட அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டு விரைவில் ஆற்றுப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீா் எடுக்கப்படும்.

புதுச்சேரி மக்கள் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு, சிக்கனமாக நீரைப் பயன்படுத்தவும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளைப் புதுப்பித்து, நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்கவும் வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.