புதுச்சேரி: புதுவையில் ஆட்டோ பதிவு(எஃப்சி) கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தினர் புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
புதுவையில் ஆட்டோ பதிவு கட்டணமாக 700 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை, திடீரென ரூ.4600-ஆக உயர்த்திக் கட்டுவற்கு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், இந்த தொழிலை நம்பியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டணமின்றி காப்பீடு(இன்சூரன்ஸ்) கட்டணமாக ஆட்டோ ஒன்றுக்கு ரூ.8000, சாலை வரியாக ரூ.1500 கட்ட வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஆட்டோ எஃப்சி எடுப்பதற்கு முன்னர், வண்டியை டிங்கரிங் வேலை, பெயிண்டிங் வேலை, லைனர் வேலை, மெக்கானிக் கூலி என ரூ.30,000 வரை செலவு செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் எஃப்சி கட்டணத்தை ரூ.700-யிலிருந்து ரூ.4600 ஆக உயர்த்தி ஆட்டோ தொழிலை அழித்தொழிக்கும் வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்து வருவதைக் கண்டித்தும், உயர்த்திய எஃப்சி கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஏஐடியுசி புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர் நல சங்கம் சார்பில், புதுச்சேரி போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தை ஆட்டோக்களுடன் முற்றுகையிட்டு திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் K.சேது செல்வம், ஆட்டோ சங்க மாநில தலைவர் V. சேகர், மாநில பொருளாளர் L. செந்தில் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆட்டோ சங்க மாநில நிர்வாகிகள், மாநில துணை தலைவர்கள் T. பாளையத்தான், R. ரவிச்சந்திரன், R. சிவசுப்பிரமணியன், G.வாசு, K.ஜீவா, S.முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களுடன் பங்கேற்று, கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.