புதுச்சேரி: புதுவையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள கவிஞரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன் , சந்திர பிரியங்கா, சாய் ஜெ.சரவணகுமார் எம்பி, செல்வகணபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் பாரதியார், பாரதிதாசன் இருவருக்கும் முழு மரியாதை செலுத்தப்படுகிறது. புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாரதிதாசன் எழுதியதுதான்.
பாரதிதாசன் பாடும்போது "தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை" என்று சொன்னார். அதனால் புதுச்சேரியில் எல்லாப் பெயர் பலகைகளும் தமிழில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது பாரதிதாசனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதை, கடமையாக இருக்கும். அரசை கட்டாயப்படுத்துவதைவிட நாமாக முன்வந்து தமிழ் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும்.
புதுச்சேரியில் எல்லா இடங்களிலும், வணிக நிறுவனங்களிலும் தமிழ் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்ற குறிப்பை தருவது குறித்து, முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
வீட்டில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை வைத்துப் பழகுவோம். தமிழை பாராட்டுவோம், சீராட்டுவோம். புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து இல்லாமல் எந்த அரசு நிகழ்ச்சியும் தொடங்கப்படுவது இல்லை என்று கூறினார்.