புதுச்சேரியில் திடுக்கிடும் சம்பவம்: தலைமறைவானவர் கடத்திக் கொலை; 9 பேர் கைது

புதுச்சேரியில் கடன் வாங்கிக் கொண்டு தலைமறைவானவரை கூலிப்படையை ஏவி விட்டு கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்
புதுச்சேரியில் திடுக்கிடும் சம்பவம்: தலைமறைவானவர் கடத்திக் கொலை; 9 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கடன் வாங்கிக் கொண்டு தலைமறைவானவரை கூலிப்படையை ஏவி விட்டு கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பர், பைனான்சியர்கள் உள்பட 9 பேரை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நேற்று இறந்து கிடந்ததுள்ளது. இது குறித்து கோரிமேடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

இதில் இறந்து கிடந்த நபரின் உடலில் கட்டையால் தாக்கபட்டு கொலை செய்யபட்டு இருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி கோரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சுல்தான்(29) என்பதும், பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கடத்தி வந்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. 

இது தொடர்பாக கோரிமேடு ஆய்வாளர் பாலமுருகன் தீவிர விசாரணையில் இறங்கினார். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. புதுச்சேரி பைனான்சியர்களான நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த சிவசங்கரன் மற்றும் பிரபாகரன், சந்திரமோகன், ஜாகீர் உசேன் ஆகியோரிடம் பல லட்சங்களை ஷேக் சுல்தான் வட்டிக்கு வாங்கி உள்ளார். சுமார் 2 வருடங்கள் ஆகியதால் தங்களது பணத்தை, பைனான்சியர்கள் கேட்டு உள்ளனர். இதற்கு அவர் சரியான பதிலை கூறவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்பு தலைமறைவு ஆனார். இதையடுத்து அவரை பைனான்சியர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி 45 அடி ரோடு பகுதியில் ஷேக் சுல்தான் இருப்பதாக, சிவசங்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷேக் சுல்தானை கடத்தி வருமாறு கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், சரத், தெஸ்தான் ஆகியோருக்கு சிவசங்கரன் உத்தரவின் பேரில் அவர்கள் விரைந்து சென்று, ஷேக் சுல்தானை ஆட்டோவில் நெல்லித்தோப்புக்கு கடத்தி வந்தனர். பின்பு கான்வென்ட் வீதியில் உள்ள சிவசங்கரனின் நண்பரான சகாயராஜ் வீட்டில், ஷேக் சுல்தானை அடைத்து வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன். பைனான்சியர்களான சிவசங்கரன், பிரபாகரன், சந்திரமோகன், ஜாகீர் உசேன் ஆகியோர் விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்களது முன்னிலையில் பணம் கேட்டு கூலிப்படையினர் ஷேக் சுல்தானை கடுமையாக தாக்கினர். தொடர்ந்து கட்டி வைத்து அடித்ததால் ஷேக் சுல்தான் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து காவலர்களிடமிருந்து தப்பிக்க, ஷேக் சுல்தான் உடலை ஆட்டோவில் ஏற்றி, தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வீசி சென்று உள்ளனர். பின்பு ஆட்டோ நம்பர் வைத்து, ஓட்டுநரை பிடித்து நடந்த சம்பவத்தை காவல்துறையினர் தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவர்கள் புதுச்சேரி எல்லை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பைனான்சியர்கள் சிவசங்கரன், பிரபாகரன், ஜாகீர் உசேன், சந்திரமோகன், சகாயராஜ் மற்றும் கூலிபடையினர் ராஜேஷ், சரத், தெஸ்தான் ஆகியோரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com