புதுவை முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு!

புதுவை முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
புதுவை முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு!

காரைக்கால்: புதுவை முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி)  தொகுதியில் நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலும் வெற்றிபெற்றவர் மு.சந்திரகாசு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் காலமானார். இவரது மகள் சந்திர பிரியங்கா. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் ஏற்கெனவே இதே தொகுதியில் பேரவை உறுப்பினராக 2016 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

கடந்த 2021 தேர்தலில் வெற்றிபெற்ற இவர் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்த இவர், கடந்த அக்.10-ஆம் தேதி தமது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

ஜாதிய ரீதியிலும், பாலின  ரீதியிலும் தாம் பாதிக்கப்படுவதாக ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர், இவர் நீக்கப்பட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது. கணவர் சண்முகத்துக்கும் சந்திர  பிரியங்காவுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. அரசியல் மற்றும் தமது குடும்ப பிரச்னை அவரை சுற்றியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது கணவர் சண்முகம் தமக்கு  கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தமக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடுபதாகவும் புதுவை டிஜிபி சீனிவாஸிடம் சந்திர பிரியங்கா அண்மையில் புகார் அளித்தார். இதுகுறித்து காரைக்கால்  காவல் துறையினர் விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கணவர் சண்முகத்திடமிருந்து விவாகரத்து கோரி காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் சந்திர பிரியங்கா திங்கள்கிழமை மனு அளித்தார்.

இது குறித்து சந்திர பிரியங்கா கூறுகையில், "எனக்கு கொலை மிரட்டல் உள்ளது. எனக்கு எதிராக சில சதி வேலைகள் நடப்பதாக உணர்கிறேன். கணவர் மூலமாக இவை நடப்பதாக தெரிகிறது. இது குறித்து  புதுச்சேரி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இனிமேலும் சரிப்பட்டு வராது என்பதால் விவாகரத்து கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com