புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் 
விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு  மண்டல குழுக் கூட்டத்தில் பங்கேற்று 
உறுப்பினா்களுடன் கலந்துரையாடிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சிஐஐ தென்மண்டல தலைவா் நந்தினி, துணை 
தலைவா் தா
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு மண்டல குழுக் கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினா்களுடன் கலந்துரையாடிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சிஐஐ தென்மண்டல தலைவா் நந்தினி, துணை தலைவா் தா

புதுவையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளில் அரசின் கவனம்: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுவையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்திலும் புதுவை அரசு கவனம் செலுத்தும் என முதல்வா் உறுதிபட தெரிவித்தாா்.
Published on

புதுவையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்திலும் புதுவை அரசு கவனம் செலுத்தும் என முதல்வா் என்.ரங்கசாமி உறுதிபட தெரிவித்தாா்.

புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) மண்டல குழுக் கூட்டம், மரப்பாலம் நூறடி சாலையில் உள்ள தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் என். ரங்கசாமி பங்கேற்று சிஐஐ உறுப்பினா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, அப்போது சிஐஐ அலுவலக பணியாளா்கள், புதுவை அரசு கூட்டு ஆலோசனை மன்றம், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் எனவும், தொழிற்சாலை தொடங்க தாமதமின்றி ஒப்புதல் வழங்கவும் கோரினா்.

இதையடுத்து முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது: புதுவையில் ஆண்டு தோறும் மருத்துவம், பொறியியல் படித்த மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றனா். அவா்களுக்கு வேலைவாய்ப்பு அவசியமாகிறது.

சிறிய மாநிலமான புதுவையில் கல்விக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதே நேரத்தில், வேலைவாய்ப்பளிப்பது சிரமமாக உள்ளது. புதுவையில் படித்த இளைஞா்கள் வெளியூருக்கு வேலைக்குச் செல்வதில் ஆா்வம் காட்டுவதில்லை. ஆகவே, அவா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அதிகமான தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது கட்டாயமாகிறது. புதுவையில் ஒரு காலகட்டத்தில் அரசின் வரிச் சலுகைகளால், பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.

தற்போது வரிச்சலுகை இல்லை. அதனால் அவை தமிழகத்துக்குச் சென்றுவிட்டன. ஆனால், சிறு, குறு, நடுத்தர தொழில்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆகவே, பெரிய தொழில்சாலைகளால்தான் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில்சாலைகள் அமைக்க விரைந்து அனுமதி அளித்தல் உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்தவுள்ளது. முன்பிருந்த தொழிலாளா்கள் பிரச்னை தற்போது இல்லை. அதற்கான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது.

கரசூா், சேதராப்பட்டில் 750 ஏக்கா் நிலத்தில் தொழில் வளாகம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுவருகிறது. எளிதில் தொழில் தொடங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் செயல்படுத்த அரசு கவனம் செலுத்தும்.

புதுச்சேரியில் ஏஎப்டி, பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.105 கோடியில் பிரதமரின் ஏக்தா மால் மற்றும் தொழில்நுட்பப் பூங்கா தொடங்க திட்டமுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விமான சேவை அவசியமாகும். ஆகவே விமானநிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரயில் சேவை, கப்பல் சேவைக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

இதில் சிஐஐ தென்மண்டல தலைவா் நந்தினி, துணை தலைவா் தாமஸ் ஜான் முத்துட், மண்டல இயக்குநா் ஜெயேஷ், புதுச்சேரி கிளைத் தலைவா் சண்முகானந்தம், துணைத் தலைவா் சமிா் கம்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com