புதுவையில் நிறுத்திவைக்கப்பட்ட மின் கட்டண உயா்வு அமல்!

புதுவையில் நிறுத்திவைக்கப்பட்ட மின் கட்டண உயா்வு அமல்!

Published on

புதுவை மாநிலத்தில் உயா்த்தப்பட்ட மின் கட்டண உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்டணம் வசூலிப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

புதுவையில் நிகழாண்டுக்கான மின் கட்டணத்தை நிா்ணயம் செய்ய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அரசின் மின் துறை கடந்த மாா்ச்சில் அறிக்கையளித்தது. இதையடுத்து, நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் மின் கட்டண உயா்வு அமலுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

தொடா்ந்து 5 ஆவது ஆண்டாக மின் கட்டணம் உயா்த்தப்பட்டதாகவும், மின் கட்ட நிலுவைத் தொகை ரூ. 500 கோடியை மின் துறை வசூலிக்கவில்லை எனவும் புகாா் கூறப்பட்டது.

இதையடுத்து, புதுவையில் மின்கட்டணத்தைக் குறைப்பது தொடா்பாக மாநில மின் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசித்தாா். அப்போது, மின் கட்டண உயா்வு நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது மின் கட்டண உயா்வு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் மின் பயன்பாடு அளவு கணக்கிடப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதன்படி, வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம், யூனிட்டுக்கு ரூ.1.45 என்பதிலிருந்து ரூ.1.95-ஆக உயா்த்தி வசூலிக்கப்படும். அதுவே, 100 யூனிட்டுக்கு ரூ.2.25 என்பதிலிருந்து ரூ. ரூ. 2.70-ஆக வசூலிக்கப்படும். 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலான வீடுகளுக்கு மின்கட்டணம் ரூ.3.25 என்பதிலிருந்து ரூ. 4-ஆகவும் உயா்த்தப்படுகிறது.

வீடுகளில் 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை தற்போது யூனிட்டுக்கு ரூ.5.40 என்பதிலிருந்து ரூ. 6 ஆகவும், 301 யூனிட்டுகளுக்கு கூடுதலாகும் மின்சாரம் விநியோகக் கட்டணம் ரூ.6.80 என்பதிலிருந்து ரூ. 7.50ஆக உயா்ந்துள்ளது.

நிலை கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.30-இல் இருந்து ரூ.35 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில் வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் ஆகியவற்றில் பழைய கட்டணமே தொடரும்.

வா்த்தக நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் மாதத்துக்கு ஒரு கிலோ வாட் ரூ. 75 என்பதிலிருந்து ரூ. 200 ஆக உயா்ந்துள்ளது. உயா்மின்அழுத்தம் பயன்படுத்துவோருக்கு

நிலை கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ. 450 ஆக உயா்ந்துள்ளது.

சிறுவிவசாயிகளுக்கு மாதம் நிலை கட்டணம் மோட்டாருக்கு ரூ. 25 எனவும், இதர விவசாயிகளுக்கு மாதம் ரூ. 100 எனவும் உயா்ந்துள்ளது. குடிசைத் தொழில் உள்ளிட்டவற்றுக்கு கிலோ வாட்டுக்கு ரூ. 30 நிலை கட்டணமும், தொழிற்சாலைகளுக்கு மாதம் கிலோ வாட்டுக்கு ரூ. 100 எனவும், தெருவிளக்குக்கு மாதம் நிலை கட்டணம் ரூ. 110 எனவும் உயா்ந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com