துணைநிலை ஆளுநா் பதவியை  ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜனை புதுவை ராஜ் நிவாஸில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.
துணைநிலை ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜனை புதுவை ராஜ் நிவாஸில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.

மனசாட்சிப்படி துணைநிலை ஆளுநா் பதவியில் செயல்பட்டேன்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

புதுவை துணைநிலை ஆளுநா் பதவியில் மனசாட்சிப்படி செயல்பட்டுள்ளேன்.

புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் பதவியில் மனசாட்சிப்படி செயல்பட்டுள்ளேன். மக்களுடனான எனது உறவு, அன்பு என்றும் தொடரும் என முன்னாள் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா். புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.

இந்நிலையில், புதுச்சேரியில் ஆளுநா் மாளிகையில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மக்கள் மிகப்பெரிய அன்பை என்மீது செலுத்தினா். அதற்காக நன்றியையும், வணக்கத்தையும் தெரிவிக்கிறேன். ஆனால், வாழ்வில் சில நேரம் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனடிப்படையில் தற்போது பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். தெலங்கானா ஆளுநராக இருந்தபோது, 3 மாதங்களுக்கு மட்டும் எனக்கூறியே புதுவையின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டேன். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட அனுமதித்த பிரதமா், உள்துறை அமைச்சா், குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வாழ்வில் மறக்கமுடியாத பல திட்டங்களை புதுவையில் செயல்படுத்தியுள்ளேன். ஆகவே, மூன்றாண்டுகளில் முழு மனதிருப்தியுடன் முழுமையான சேவை செய்துள்ளேன். பள்ளிக் குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்தியதுடன், மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கியதில் மனநிறைவு ஏற்படுகிறது. புதுவையில் ஆளுநா் உரையைத் தமிழில் ஆற்றியது பெருமையாக இருந்தது. முழுக்க முழுக்க எனது விருப்பத்தின்படியே துணைநிலை ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்து மக்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளேன். ஆனால், என்னை வெளிமாநிலத்தவா் என்று கூறியது சரியல்ல. நான் தமிழ் மகள். தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே பெருமையாகும்.

சென்னையில் பாஜக அலுவலகத்துக்கு சென்று அதன்பின் எனது மக்களவைத் தோ்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளேன். மக்கள் மீதும், கடவுள் மீதும் என்மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. மக்கள் பணியிலிருந்து என்னை பிரிக்கமுடியாது. மனசாட்சிப்படி ஆளுநா் பணியைச் செய்துள்ளேன்.

அணிவகுப்பு மரியாதை: புதுவை ஆளுநா் மாளிகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பணிநிறைவு அணிவகுப்பு மரியாதை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக அவரை ஆளுநா் மாளிகையில் முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் சந்தித்து பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com