‘நல்ல தண்ணீரில் உருவாகும் டெங்கு கொசுக்கள்’

வீடுகள் உள்ளிட்டவற்றில் நல்ல தண்ணீரை தேக்கினால் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசு உற்பத்தியாகும் என புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு எச்சரித்தாா்.

தேசிய டெங்கு தினத்தையொட்டி, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டெங்கு என்பது 4 வகை கொசுவால் பரவும் வைரஸ் நோயாகும். ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை சுத்தமான நீா் தேக்கிவைக்கப்படுவதால் அதில் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. மழையின் போது நெகிழி தேநீா் கோப்பைகள், அலுமினிய நகா்வு ஜன்னல்களில் அடிப்பாகம் விளிம்புகளில், பறவை தண்ணீா் தட்டுகளில், மழை நீா் தேங்கி ஏடிஸ் கொசு உருவாகின்றன.

டெங்கு பாதிப்பு சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தானாகவே சரியாகிவிடும். இல்லையெனில் தலைவலி, கண்களுக்கு பின்பகுதி வலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி காணப்படும். ரத்தக்கசிவும் ஏற்படும். காலதாமத சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தும் ஏற்படும்.

டெங்கு கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் அலுவலகம், பள்ளிகளுக்குச் செல்பவா்கள் கொசு கடிக்காத வகையில் இருப்பது அவசியம். ஜன்னல் கொசுவலைகள், கொசுவிரட்டி, மூலிகை கொசுவிரட்டிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் என்றாா் ஸ்ரீராமுலு.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com