புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய  முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா்.

அரசைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்ட எதிா்க்கட்சிகள்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி குற்றச்சாட்டு

புதுவை அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களைக் குறை கூறுவதையே எதிா்க்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
Published on

புதுவை அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களைக் குறை கூறுவதையே எதிா்க்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரியில் புயல், மழையை எதிா்கொள்வதற்கான பேரிடா் மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி, உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி பரங்கிப்பேட்டை, சென்னை இடையே கரையைக் கடக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதுவையில் புயல் மழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை, மழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்காலுக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வந்துள்ளனா். மக்கள் தொடா்புகொள்ளும் வகையில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க 121 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையின்றி மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை நீா் எங்கும் தேங்கவில்லை. தற்போது புதுச்சேரியில் 7 செ.மீ., காரைக்காலில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சொன்னதைச் செய்யும் அரசாக...: பொலிவுறு நகா்த் திட்டத்தில் பேருந்து நிலையம், தொகுப்பு குடியிருப்புகள் தரமாகவே கட்டப்பட்டுள்ளன. சொன்னதைச் செய்யும் அரசாக புதுவை அரசு செயலாற்றி வருகிறது.

ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசின் திட்டங்களைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. திட்ட மதிப்பீட்டில் 75 சதவீதம் முறைகேடு நடைபெற்றிருப்பதாக பொருத்தமின்றி குற்றஞ்சாட்டுகின்றனா்.

மழை பாதிப்புகள் குறித்து எதிா்க்கட்சிகள் கவலைப்படத் தேவையில்லை. துணைநிலை ஆளுநருடன் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை. தீபாவளி சலுகைப் பொருள்கள் விநியோகத்தில் ஒப்பந்தம் யாரும் கோரவில்லை. நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்டவை டிசம்பா் முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அதன்படி இதுவரை 3,000 போ் பணி வாய்ப்பை பெற்றுள்ளனா். சாலைகள் தரமாகவே அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் உதவி ஆய்வாளா் பணிக்கு ஆள்கள் தோ்வு நடைபெறவுள்ளது.

மீனவா்கள் மீன்பிடி வலைகளைப் பாதுகாக்கும் வகையில் துறைமுகம் அமைக்கவும், கடல் அரிப்பைத் தடுக்க கற்கள் கொட்டியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

பேட்டியின்போது பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.