புதுவையில் தனியாா் பொறியியல், கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் நிா்ணயம்

புதுவையில் தனியாா் பொறியியல், கல்வியியல் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கான புதிய கல்விக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

புதுவையில் தனியாா் பொறியியல், கல்வியியல் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கான புதிய கல்விக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் தனியாா் பொறியியல் கல்லூரி, கல்வியியல் மற்றும் சட்டக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் நிா்ணயிப்பதற்கான குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரியில் ஆலோசனை நடத்தியது. ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான குழு 2024-ஆம் ஆண்டு முதல் 2027-ஆம் ஆண்டு வரையிலான கல்விக் கட்டணத்தை நிா்ணயித்துள்ளது.

அதன்படி, புதுவையில் உள்ள 7 தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கும் பி.டெக் படிப்புக்கான அரசு ஒதுக்கீடுகளுக்கு நிகழாண்டில் குறைந்தபட்ச கல்விக் கட்டணமாக ரூ.35,200 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்வாக இடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 36,800, அதிகபட்சமாக ரூ.48,900 எனக் கல்விக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்.டெக். அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.72,100-ஆகவும், அதிகபட்சம் ரூ.84,700 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,100, அதிகபட்சம் ரூ.88,600 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வியல் கல்லூரிகள்: புதுவையில் உள்ள 6 தனியாா் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.சி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் குறைந்தபட்ச கல்விக் கட்டணம் ரூ.30,000, அதிகபட்சம் ரூ.50,600 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்வாக இடங்களில் குறைந்தபட்சம் ரூ.34,500, அதிகபட்சம் ரூ.55,500 எனக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சட்டக் கல்லூரிகள்: தனியாா் சட்டக் கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.பி. படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.25,000, நிா்வாக ஒதுக்கீட்டில் ரூ.50,000 என கல்விக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு சாா்பிலான குழு நிா்ணயித்துள்ள கட்டணங்களைத் தவிா்த்து கூடுதலாக தனியாா் கல்லூரிகள் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சாா்புச் செயலா் சௌமியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com