புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!

மழைக்காலம் முன்னிட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் புதுச்சேரியில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Dengue incidence in Puducherry
புதுச்சேரி
Published on
Updated on
2 min read

புதுச்சேரியில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 53 சதவீதம் டெங்கு நோய் தாக்கம் குறைந்துள்ளதாகவும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் அனைத்து வகையான மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு நோய் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகும் வீடு மற்றும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வைத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தடுப்பு குறித்த ஆட்டோ வாகனங்கள் விழிப்புணர்வு பிரசாரம் இன்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் கலந்துகொண்டு டெங்கு மற்றும் சிக்கன்குனியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு விழிப்புணர்வு ஆட்டோ வாகனங்கள் பிரசாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஆட்டோக்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களில் சென்று ஒலிபெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளனர்.

அப்போது தேசிய சுகாதாரத்துறை இயக்க இயக்குனர் கோவிந்தராஜ், பொது சுகாதாரம் துணை இயக்குனர் சமீமுனிசா பேகம், குடும்ப நலம் துணை இயக்குனர் ஆனந்தலஷ்மி, தடுப்பூசி பிரிவு துணை இயக்குனர் உமாசங்கர், யானைக்கால் நோய் தடுப்பு மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு உதவி இயக்குனர் வசந்தகுமாரி, மாணவர் நல அதிகாரி விவேகானந்தா மற்றும் இதர திட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பட்டிமன்றங்கள், பண்பலை வானொலி, எப்எம், ரேடியோக்கள் மூலமாகவும், திரையரங்குகள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள்,

புதுச்சேரியில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களை தடுப்பது குறித்து ஆட்டோ வாகனப் பிரசாரத்தை இன்று துவக்கி வைத்துள்ளதாகவும், புதுச்சேரியில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 53 சதவீதம் டெங்கு நோய் குறைந்துள்ளதாகவும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான அனைத்து படுக்கை வசதி மற்றும் மருத்துவ உதவிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா போன்ற நோய்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும், கெட்டுபோன உணவுகளை உண்ணாமல், சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும், வீடுகளிலும், வீட்டின் அருகிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com