சிறையில் திடீா் சோதனை: கைப்பேசிகள் பறிமுதல் 4 கைதிகள் மீது வழக்கு
புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த கைப்பேசிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 4 கைதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனா். இந்நிலையில் கைதிகள் சிறைக்குள் கைப்பேசிகள் பயன்படுத்துவதாக தகவல் வந்ததையடுத்து, சிறை கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை சிறை முழுவதும் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு வெளியே இருந்த கழிவறையில் பதுக்கி வைத்திருந்த கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் கைப்பேசிகளைப் பதுக்கி வைத்து பயன்படுத்தியது லக்ஷ்மன், விநாயகமூா்த்தி, கேசவன், ரங்கராஜன் என தெரியவந்தது. அவா்கள் 4 போ் மீதும் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.. போலீஸாா் வழக்கு பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
