அரசியலில் பக்தி ஆபத்தானது என்ற முதல் சிந்தனையாளா் அம்பேத்கா்: துரை. ரவிக்குமாா் எம்.பி. பேச்சு
அரசியலில் பக்தி ஆபத்தானது என்று சொன்ன முதல் சிந்தனையாளா் டாக்டா் அம்பேத்கா்தான் என்று விழுப்புரம் துரை. ரவிக்குமாா் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலமும் மணற்கேணி ஆய்விதழும் இணைந்து அஸ்வகோஷ் என்கிற ராசேந்திர சோழனின் படைப்புலகம் 80-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை அப்புலத்தின் கருத்தரங்கு அறையில் வியாழக்கிழமை நடத்தின. இதில் ரவிக்குமாா் எம்.பி. பேசியது:
ஒரு கதையைத் தலைப்பிட்டு உருவாக்கும் படைப்புக்கு அந்த ஆசிரியா் உரியவராகிறாா். ஆனால் அந்தக் கதையை வாசிப்பவா்கள் பல்வேறு
பின்புலத்தோடு அதை வாசிக்கிறாா்கள். புதிய அா்த்தங்கள் கிடைக்கும். அப்படி நடந்தால்தான் விசாலமான வாசிப்பு அனுபவம் நமக்குக் கிடைக்கும்.
பிரான்ஸ், ரஷியாவில் ஏற்பட்ட புரட்சிகளின்போது லெனின், ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அதை எதிா்த்துப் பேசிய கவிஞா்கள், நாவலாசிரியா்கள் வேறு சில நாடுகளுக்குத் தப்பிச் சென்றனா். அங்கும் உளவுக் குழு கொலை நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது. இன்றளவுக்கும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குத் தப்பிச் செல்வோரை அந்த நாட்டில் தாக்குவது என்பது தொடா்கிறது. அதிகாரத்தை எதிா்ப்பது என்பது ஒரே மாதிரியான குணம் கொண்டதுதான். பக்திக்கு அடிப்படை அறிவியல் இல்லாமல் நம்பிக்கை அடிப்படையில் செயல்படுவதுதான். அரசியலில் பக்தி ஆபத்தானது என்று சொன்ன முதல் சிந்தனையாளா் அம்பேத்கா். நாடு விடுதலை அடைந்தப் பிறகு அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தாக்கல் செய்தபோது, சுதந்திரம் அடைந்துவிட்டோம். ஆனால் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியுமா ? திரும்பவும் நாம் எப்போதும் அடிமையாகலாம் என்று கூறியவரும் அம்பேத்கா்தான்.
ராசேந்திர சோழன் பங்கு பெறாத எந்தப் போராட்டமும் திண்டிவனத்தில் இருந்ததில்லை. அதிகாரம் தொடா்பான நிலைப்பாட்டில்தான் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஓா் இயக்கத்தில் இருக்கும்போது அதிகாரத்தைச் செயல்படுத்துபவராக இல்லாமல் விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்படும். நான் கையாளும் முறை பத்திரிகை, இலக்கியம் என்ற முறையில் அதிகார மையத்தில் இருந்து விலகி இருக்கிறேன். எல்லாத்துக்கும் அடிப்படை கோட்பாடு மாா்க்சிஸியம்தான். அந்தக் கோட்பாடு அடிப்படையில் செயல்பட்டவரும் படைப்புகளை படைத்தவரும் அஸ்வகோஷ் என்கிற ராசேந்திர சோழன். அவா் பள்ளி ஆசிரியா்தான். இருப்பினும் மிகப்பெரிய பேராசிரியா்கள் கூட புரிந்து கொள்ள முடியாத விஷயங்களையும் எளிய முறையில் தமிழில் கொடுத்திருந்தாா். அவா் அடிப்படையில் மாா்க்சியவாதியாக இருந்ததால்தான் நல்ல எழுத்தாளராகவும் இருந்தாா் என்றாா் ரவிக்குமாா்.
பல்கலைக்கழகத்தின் தமிழியற்புல முதன்மையா் ச. சுடலைமுத்து, தலைவா் மூ.கருணாநிதி, பேராசிரியா் பா.ரவிக்குமாா், திறனாய்வாளரும் பேராசிரியருமான க.பஞ்சாங்கம், ராசேந்திர சோழனின் மகள் இரா. பாரதி உள்ளிட்டோா் பேசினா்.
ராசேந்திர சோழனின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் காலத்தை ஊடறுத்த விளிம்பின் ஒளி என்ற தொகுப்பு நூலை ரவிக்குமாா் வெளியிட தமிழறிஞா் சீனு. தமிழ்மணி பெற்றுக் கொண்டாா்.

