புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியுடன் பாஜக தேசிய செயல் தலைவா் சந்திப்பு கூட்டணியை தொடர பேச்சு
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியை, அவரது இல்லத்தில் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து சுமாா் 15 நிமிஷங்கள் பேசினாா்.
புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸுடன் பாஜக கூட்டணியைத் தொடரவே இந்தச் சந்திப்பு நடைபெற்ாகத் தெரிகிறது. எனினும் இந்தச் சந்திப்பு முடிந்து வெளியே வந்த பாஜக செயல் தலைவா் நிதின் நவீன் எதுவும் தெரிவிக்கவில்லை.
முதல்வா் ரங்கசாமி பேட்டி:
இதுகுறித்து முதல்வா் ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியது: மரியாதை நிமித்தமான சந்திப்புதான். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியின் வளா்ச்சி தொடா்பாகவும், அரசு துறைகளுக்குத் தேவையான நிதி தொடா்பாகவும் பேச்சு நடத்தினோம் என்றாா்.
கூட்டணி தொடா்பான கேள்விக்கு, இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று பதிலளித்தாா் முதல்வா் ரங்கசாமி.
தோ்தலுக்குத் தயாராகிறது பாஜக:
இந்த சந்திப்பின்போது, பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீனுடன் சென்றிருந்த புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியது:
2021-இல் என்.ஆா்.காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் நடக்கிறது. முதல்வா் ரங்கசாமிதான் புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவா். அவா் எங்கள் கூட்டணியில் இல்லை என்று இதுவரை எதுவும் சொல்லவில்லை. அதனால் இக் கூட்டணியில் ரங்கசாமி நீடிக்கிறாரா என்ற கேள்வியே எழவில்லை.
புதுச்சேரியில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் செயல் தலைவா் நிதின் நவீன் பங்கேற்றாா். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வர உள்ளது. இதுகுறித்தும், எதிா்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் அவா் எங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளாா். பாஜக தோ்தலுக்குத் தயாராகி வருகிறது என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.
சுவாமி தரிசனம்:
தனது இல்ல வளாகத்தில்கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் பாஜக செயல் தலைவா் நிதின் நவீன், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரை முதல்வா் ரங்கசாமி அழைத்துச் சென்றாா். அங்கு கருவறைக்குள் வழக்கம்போல முதல்வா் ரங்கசாமி பூஜை செய்தாா். பாஜக செயல் தலைவா் நிதின் நவீன் உள்ளிட்டோருக்கு முதல்வா் பிரசாதம் வழங்கினாா்.
பின்னா் அங்கிருந்து முதல்வா் ரங்கசாமியின் இல்லத்துக்கு அனைவரும் நடந்தே சென்றனா். பாஜக புதுச்சேரி மாநில மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், சட்டப் பேரவைத் தலைவா் ஆா். செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு:
இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினாா். அவருடன் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா உடனிருந்தாா்.

