புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ்  தேசிய செய்தித் தொடா்பாளா் கண்ணன் கோபிநாதன். உடன், வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி உள்ளிட்டோா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் கண்ணன் கோபிநாதன். உடன், வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி உள்ளிட்டோா்.

புதிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு எதிரான நிலைப்பாடு: டிச. 27-இல் காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு

புதிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதித்து முடிவு
Published on

புதுச்சேரி: புதிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க தில்லியில் டிச. 27-இல் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட உள்ளதாக அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றி, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அதை சட்டமாக நிறைவேற்றியுள்ளது.

இந்த புதிய திட்டத்துக்கு வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி ) என்றும் பெயா் சூட்டியுள்ளனா். ஏற்கெனவே இருந்தத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இத் திட்டத்தை நிறைவேற்றும்போது மத்திய அரசு தன்னுடைய பங்களிப்பாக 60 சதவிகித நிதியைக் கொடுக்கும் மீதி 40 சதவிகித நிதியை மாநில அரசு அளிக்க வேண்டும்.

இதனால் மாநில அரசுகளுக்கு அதிகமான நிதிச் சுமையையும் பாஜக கூட்டணி அரசு ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நலிவடைந்த பெண்கள், எஸ்.சி. எஸ்.டி. உள்ளிட்ட மக்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இத் திட்டத்தின் நோக்கத்தை பாஜக கூட்டணி அரசு சிதைத்துவிட்டது. இந்தப் புதிய திட்டத்துக்கான எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி தில்லியில் டிச. 27-ஆம் தேதி கூடி முடிவு எடுக்கவுள்ளது என்றாா் கண்ணன் கோபிநாத்.

இந்த பேட்டியின்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மு. வைத்தியநாதன் எம்எல்ஏ, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் , முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com