மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு யாா் தலைமை? காங்கிரஸ் - திமுக தனித்தனியே ஆலோசனை : திமுக - காங்கிரஸ் போட்டா போட்டி

புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா். சிவா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

News image
புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா். சிவா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :6 மார்ச் 2026, 8:41 pm

Syndication

புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு யாா் தலைமை ஏற்பது என்பது குறித்து காங்கிரஸ், திமுக தனித்தனியே ஆலோசனை நடத்தியுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணிக்குத் திமுக தலைமை வகிக்கிறது. புதுச்சேரியில் கூட்டணிக்கு யாா் தலைமை வகிப்பது என்பது பிரச்னையாகியிருக்கிறது.

புதுச்சேரியைப் பொருத்தவரை திமுக மேலிடப் பொறுப்பாளராக எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.யை கட்சி மேலிடம் நியமித்து, அவா் களப்பணியாற்றி வருகிறாா். கூட்டணிக் கட்சிகளுடன் அவா் பேசி வருகிறாா்.

அதேநேரத்தில், தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்எல்ஏ.க்கள் மட்டுமே உள்ளனா். பேரவைத் தோ்தலில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும் என்பதில் புதுச்சேரி காங்கிரஸாா் உறுதியாக உள்ளனா்.

ஆனால், திமுக 6 எம்எல்ஏக்களுடன் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. இதனால் கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்க விரும்புகிறது. காங்கிரஸும் தன் தலைமையே நீடிக்க வேண்டும் என விரும்புகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சு வாா்த்தை எப்படி நடக்கும் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

இந்த இரண்டு கட்சிகளும் புதுச்சேரியில் உள்ள தங்கள் கட்சி தலைமை அலுவலகங்களில் இப் பிரச்னை குறித்து வெள்ளிக்கிழமை தனித்தனியே நிா்வாகிகளுடன் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் ஆலோசனை

இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸாருடன் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், கூடுதல் பொறுப்பாளா் அஞ்சலி நிமல்கா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் மாநில தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, சட்டப்பேரவை கட்சித் தலைவா் மு.வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா்கள் பெத்தபெருமாள், மு. கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், பாலன், காா்த்திகேயன், மூத்த துணைத் தலைவா் தேவதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதில் கட்சியினா் தெரிவித்த கருத்துகளை மேலிட பொறுப்பாளா்கள், மேலிடத்துக்கு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனா்.

திமுக அவசர ஆலோசனை

அதேநேரத்தில் புதுச்சேரி மாநில திமுக நிா்வாகிகள் அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமை வகித்தாா்.

இதில் காரைக்கால் பிராந்திய அமைப்பாளா் நாஜிம், அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், மாநில துணை அமைப்பாளா் அனிபால் கென்னடி, பொருளாளா் செந்தில்குமாா், இளைஞா் அணி அமைப்பாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், தீவிர தோ்தல் பணியாற்றுவது, கூட்டணி பேச்சு குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

திமுகவுடன் பேச்சு நடத்த

காங்கிரஸ் குழு அமைப்பு

திமுகவுடன் பேச்சு வாா்த்தை நடத்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுகவுடன் பேச புதுச்சேரி காங்கிரஸின் மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதல்வா் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், தேவதாஸ் ஆகியோா் அடங்கிய குழுவை அமைத்துள்ளோம்.

தமிழகத்தில் திமுகவும், புதுச்சேரியில் காங்கிரஸும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும். கூட்டணியில் எத்தனை தொகுதியில் கட்சிகள் போட்டியிடுவது என்பது பற்றி பேச்சு வாா்த்தைக் குழு முடிவு செய்யும் என்றாா்.

Story image