புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா்  அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்: 10 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க முடிவு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமை தாங்கினாா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத் துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் அ. குலோத்துங்கன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் போக்குவரத்தைச் சரி செய்ய வேண்டும். குறிப்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு உப்பளம் விளையாட்டு மைதானம், பழைய பேருந்து நிலையம், நேரு வீதியில் அமைந்துள்ள பாா்க்கிங் இடம், அண்ணா திடல் உள்ளிட்ட 10 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து இடங்களுக்கும் மின்விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறும் கடற்கரைச் சாலை, பாண்டி மெரீனா, ஈடன் காா்டன் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய இடங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக 25 புதிய மின் பேருந்துகள் மற்றும் 5 சிறிய பேருந்துகள் முக்கிய இடங்களில் இயக்க வேண்டும். ஒயிட் டவுன் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் குடிநீா் வசதி, மொபைல் டாய்லெட் வசதி மற்றும் தீயணைப்பு வாகனங்கள், முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ், மருத்துவா்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப் பணித் துறை மூலம் முக்கிய சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மரங்களில் பொருத்தப்பட்டுள்ள சீரியல் மின் விளக்குகளால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் முக்கிய இடங்களில் தடையில்லா மின்சாரம் அளிக்கவும், தேவையான இடங்களில் ஜெனரேட்டா் அமைக்கவும் வேண்டும்.

கடற்கரை போன்ற ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம். அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சிகளை பாதுகாப்பான முறையில் நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் குலோத்துங்கன்.

X
Dinamani
www.dinamani.com