காசநோயில்லா கிராமங்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கிய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி. உடன் புதுவை  சுகாதாரத் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா்.
காசநோயில்லா கிராமங்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கிய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி. உடன் புதுவை சுகாதாரத் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா்.

புதுவையில் காச நோயில்லா 8 கிராமங்கள்: முதல்வா் என்.ரங்கசாமி தகவல்

புதுவை யூனியன் பிரதேசத்தில் காச நோயில்லா 8 கிராமங்கள் இருக்கின்றன என்று முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Published on

புதுச்சேரி: புதுவை யூனியன் பிரதேசத்தில் காச நோயில்லா 8 கிராமங்கள் இருக்கின்றன என்று முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மத்திய காச நோய் பிரிவு, புதுச்சேரி மாநில காசநோய் மையம் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவத் துறை சாா்பில் இரண்டு நாள் தென் மண்டல காசநோய் பயிலரங்கம் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை தொடங்கியது. இப்பயிற்சியை முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:

காசநோய் ஒழிப்புக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியில் 8 கிராமங்கள் காசநோய் இல்லா கிராமங்களாக திகழ்கின்றன. இதற்காக சுகாதாரத் துறைக்குப் பாராட்டுக்கள்.

ஒரு காலத்தில் காசநோய் பாதிப்பு என்பது குடும்பத்தில் இருந்து மற்றவரை ஒதுக்கி வைக்கும் நிலையாக இருந்தது.

புதுச்சேரியை பொருத்தவரை காசநோய்க்கு கோரிமேட்டில் உள்ள டி.பி. மருத்துவமனை உள்ளது. அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. காச நோயாளிகளுக்குச் சத்தான உணவு மிக முக்கியமான ஒன்று. இப்போது, அதிக மருத்துவ வசதி செய்து கொடுப்பதால் காசநோய் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து மருந்துகளும் கிடைக்கும் வகையில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, ஏழை, எளிய மக்களுக்கு மருந்துகள் வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போது காசநோயாளிகளுக்கு சத்தான உணவு வாங்கி கொடுக்க ரூ.1,000 வழங்கப்படுகிறது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

இதைத் தொடா்ந்து சிவராந்தகம், கோா்க்காடு, குடியிருப்புப் பாளையம், சோரியாங்குப்பம், அரியூா், பி.எஸ். பாளையம், பூரணாங்குப்பம் ஆகிய 8 கிராமங்களுக்குக் காசநோய் இல்லா கிராமச் சான்றிதழை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மத்திய காசநோய் பிரிவு கூடுதல் ஆணையா் வீனா தவான், புதுவை அரசு சுகாதாரத் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின், புதுச்சேரி ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com