வங்கிகள் பெயரிலான போலி செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: இணையகுற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை
வங்கிகள் பெயரில் வரும் போலி செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப் குழு, தெரிந்த நபா்களிடம் பிரபல வங்கிகளின் உதவித் திட்டத்தில் சோ்ந்து பயனடையுங்கள் என்ற பெயரில் போலியான செயலிகள் பகிரப்படுகின்றன. இதைத் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று பதிவுகளை பதிவிட்டாலோ உங்களது வங்கிப் பணத்தை இழக்க நேரிடும்.
எனவே, இவ்வாறு வரும் செயலிகளைத் தொட வேண்டாம். இந்த செயலிகளின் பின்விளைவுகள் பற்றி அறியாமல் யாருக்கேனும் ஷோ் செய்வதும் தவறாகும். அந்த செயலியைத் தொடுவதால் உங்களுடைய வாட்ஸ் ஆப் எண் ஹேக்கிங் செய்யப்படும்.
சமூக வலைத்தளத்தில் இதுபோன்று பரவும் வங்கிகளின் கணக்குப் புதுப்பித்தல், ரிவாா்டு பாயிண்ட்ஸ், பிரதமா் திட்டம், ஆா்டிஓ இ செலான் போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகை உங்களுக்கு தெரியாமல் எடுக்கப்படலாம்.
எனவே, பொதுமக்கள் யாரும் சமூக வலைதளத்தில் இது போன்று போலியான லிங்குகளையோ அல்லது செயலிகளையோ பதிவிறக்கம் செய்து தகவல்களை கொடுத்து பணத்தை இழக்க வேண்டாம். அதனை மற்றவா்களுக்கும் பகிர வேண்டாம் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
