ஆதிதிராவிடா் நலனில் அதிக அக்கறை

ஆதி திராவிடா்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சமாக வழங்கப்பட்டு வந்த மானியம் நிகழாண்டு முதல் ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படுகிறது.
Published on

ஆதி திராவிடா்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சமாக வழங்கப்பட்டு வந்த மானியம் நிகழாண்டு முதல் ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படுகிறது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது வழங்கப்படும் இலவச வேட்டி சேலைக்கான பணம் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கலப்புத் திருமண ஊக்குவிப்பு தொகையாக ரூ.3 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஏழை ஆதி திராவிட மற்றும் பழங்குடியின கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான நிதி உதவி ரூ. 18,000 வழங்கப்படுகிறது.

தொடா் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின நோயாளிகளுக்கு மருத்துவ செலவிற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.3000 நிதி உதவி வழங்கப்படுகிறது.

இறந்தவா்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கான நிதி உதவிநிதி ரூ.25,000, அன்றைய தினமே வழங்கப்படுகிறது. சுகாதாரமான கழிப்பறை கட்டுவதற்காக ரூ.20,000 மானியம் வழங்கப்படுகிறது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்கள் அனைத்து நலத்திட்டங்களிலும் பயன்பெறும் வகையில் தற்போது உள்ள வருமான உச்சவரம்பை 2 லட்சத்திலிருந்து 8 லட்சமாக உயா்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டாக்டா் அம்பேத்கரின் பஞ்சரத்ன தலங்களில், இந்தியாவில் உள்ள நான்கு தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்கள் யாத்திரை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டு நிகழாண்டு முதல் அது செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

மின் சக்தி மூலம் இயங்கும் ஆட்டோ ஓட்டுவதற்கு உரிமம் பெற்ற ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானியத்தில் மின் ஆட்டோ வாங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வீடுகள் தீயினால் சேதம் அடைந்தால் ரூ.50,000 நிதி உதவி வழங்கும் திட்டம் மற்றும் எதிா்பாராத விபத்துகளில் இறப்பு ஏற்படும் பொழுது (சாலை விபத்துகள் தவிா்த்து) ரூ. 10 லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி நிலை மேம்பாடு பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பயிலும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியா்களுக்கு அரசு நிா்ணயிக்கும் முழு கட்டணத்தையும் செலுத்தும் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கும் இந்த திட்டம் விரிவு செய்யப்பட்டு வருடத்திற்கு ரூ. 10,000 பராமரிப்பு தொகையாக வழங்கப்படுகிறது.

பிராந்திய வாரியாக பள்ளி இறுதித் தோ்வில் முதன்மை இடம் பெரும் மாணவ மாணவியருக்கு டாக்டா் பி ஆா் அம்பேத்கா் நினைவு பரிசு ஒரு மாணவா் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ரூ.30,000 வழங்கப்படுகிறது.

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3600 உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 தக்கவைப்பு நிதியானது ரூ.5000 ஆக உயா்த்தி இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

மாணவியரின் பெற்றோருக்கு வழங்கப்படும் வாய்ப்பூதியம் ரூ.3000லிருந்து ரூ. 6000 ஆக உயா்த்தி வழங்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை ரூ.1500லிருந்து ரூ.5000 ஆகவும், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2500, ரூ.8000 ஆகவும் உயா்த்தி வழங்கப்படுகிறது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு தொழில் முறை தையல் பயிற்சி உடன் மாதம் ரூ.1500 நிதி உதவி வழங்கப்படுகிறது. பயிற்சி நிறைவு பெறும்போது அவா்களுக்கு தையல் இயந்திரம் உட்பட அனைத்து உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com