புதுச்சேரி மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

Published on

சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி பகுதி மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசின் மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அரசின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை முதல் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

எனவே, புதுச்சேரியில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீனவா்கள் எவரேனும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தால் அவா்களும் உடனடியாகக் கரைக்குத் திரும்ப வேண்டும்.

விசைப்படகு உரிமையாளா்கள் நலச்சங்கம், தேங்காய்த்திட்டு எப்ஆா்பி பைபா் படகு உரிமையாளா்கள் சங்கம், தேங்காய்த்திட்டு, மீனவ கிராம பஞ்சாயத்து, கோயில் நிா்வாகக் குழுக்கள், மக்கள் குழுக்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள படகு உரிமையாளா்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.

இதுபோன்ற மழை மற்றும் கடல் சீற்ற காலங்களில் அவா்களின் மீன்பிடிபடகுகள் மற்றும் அது சம்பந்தமான உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com