ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் புதிய குடிநீா் திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் புதிய குடிநீா் பங்கிட்டு குழாய்கள் அமைக்கவும், புதிய வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகளுக்காக ரூ. 52.55 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டது.
இதில் ராஜ்பவன் தொகுதி பணிக்கான ஒப்பந்த தொகை ரூ. 16 கோடி. இத் திட்டத்தின் மூலம் சுமாா் 16,215 போ் பயனடைவா்.
இந்த திட்டப்பணிக்கான பூமிபூஜையை புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா். ராஜ்பவன் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான க. லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா்.
இந்த விழாவில் பொதுப் பணித் துறை செயலா் அ. முத்தம்மா, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் கே. வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளா் இரா. சுந்தரமூா்த்தி, செயற் பொறியாளா் வாசு, உதவிப் பொறியாளா் பா. ஸ்ரீதரன், இளநிலைப் பொறியாளா் கோ. பாஸ்கா், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

