தோ்தல் வாக்குறுதி அடிப்படையில் அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினவிழா புதுச்சேரி அரசு சாா்பில் கடற்கரை சாலையில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்க முதல்வா் என். ரங்கசாமி காலை 8.40 மணிக்கு வந்தாா். அவரை தலைமைச் செயலா் சரத் செளகான், டிஜிபி சாலினி சிங் உள்ளிட்டோா் வரவேற்று அழைத்துச் சென்றனா். சரியாக 8.45 மணிக்கு தேசியக் கொடியை முதல்வா் என்.ரங்கசாமி ஏற்றி வைத்தாா். பின்னா் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வா் ஏற்றுக் கொண்டாா்.
தேசிய மாணவா் படை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பையும், பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சியையும் அவா் பாா்வையிட்டாா்.
விழாவில் முதல்வா் ரங்கசாமி ஆற்றிய சுதந்திர தின உரையில் கூறியதாவது: புதுச்சேரி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை பிரதமா் நரேந்திர மோடியின் ஆசியோடு வழங்குவதற்கு, ஆக்கபூா்வமான பல வளா்ச்சிப் பணிகளை எனது அரசு மேற்கொண்டுள்ளது.
தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும். குறிப்பாக, அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடி சீரமைக்கப்படும். புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மழைக்காலத்தில் வெள்ள நீா் தேங்குவது தடுக்கப்படும். இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணத் தொலைநோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பால் பதப்படுத்தும் தொழிற்சாலை: புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதில், தேசிய பால்வள வளா்ச்சித் திட்ட பங்கான ரூ.46.27 கோடியில் முதல் தவணையாக ரூ.13.88 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து ரூ.34.35 கோடியில் ஐஸ் கிரீம் உற்பத்தி தொழிற்சாலை நிறுவும் திட்டம் பாண்லே மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
போதைப்பொருள்கள் இல்லா கல்வி நிறுவனங்களை உருவாக்கியதற்காக மத்திய அரசின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் புதுச்சேரி புராணசிங்குப்பாளையம் பி.எம்.ஸ்ரீ பாவேந்தா் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய அளவில் மூன்றாம் பரிசைப் பெற்றுள்ளது.
காரைக்கால் சேத்தூா் எம்.ஏ.எஸ். அரசு உயா்நிலைப்பள்ளி, புதுச்சேரி கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் ஆறுதல் பரிசைப் பெற்றுள்ளன.
மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) மூலம் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உயா்கல்வி பயிலும் மீனவா் சமுதாய மாணவா்களுக்கான முழு கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே செலுத்துவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மத்திய அரசின் உதவியுடன், காரைக்காலில் ரூ.1.92 கோடி செலவில் புதிய கடற்பாசி சாறு பிழிவு மையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுச் சேவை நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ரூ.500 கோடியில் இப் பணி தொடங்கப்படும்.
கடல் வழி வாணிபம்: புதுச்சேரிக்கென மாநில அளவிலான கடல்வழி வாணிப பெருந்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூா் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்த பிரதமரின் ஏக்தா மால் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து முதல் கட்டமாக ரூ.64.24 கோடியை விடுவித்துள்ளது.

விழாவில் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிட்ட முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரிக்கு அண்மையில் வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதை வழங்கி கௌரவித்தாா். இது புதுச்சேரி காவல்துறையின் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மைல்கல்லாகும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.
2 பேருக்கு குடியரசுத் தலைவா் விருது: விழாவில், குடியரசுத் தலைவரின் 2026 சுதந்திர தினவிழா விருதுகளை தலைமைச் செயலா் சரத் சௌகான் அறிவித்தாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக தற்போது புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் டி. திவ்யா, போலீஸ் கண்காணிப்பாளா் பி. ரங்கநாதன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அவா் அறிவித்தாா்.

விழாவில் இடம் பெற்ற பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், பெ.ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றேனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலை ஒற்றுமையை உருவாக்கும்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி காவல் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 43 எம்பிபிஎஸ் இடங்கள்: முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முடிவு!

புதுச்சேரி மாணவா்களுக்கு ஊட்டச்சத்து பால் வழங்கும் திட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



